Ad Widget

வலுவானதாக மாறி வரும் குட்குட் சூறாவளி! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காளவிரிகுடாவில் மையங் கொண்டுள்ள குட்குட் (HUDHUD) என அழைக்கப்படும் வலுவான சூறாவளிப் புயலானது (Severe Cyclonic Storm) ஆகி தற்போது வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
என இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் விடுத்துள்ள அவசர செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

storm-puyal

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது இது 14.3 N அகலாங்கு, 87.7 E நெட்டாங்கு எனும் அமைவிடத்தில் காணப்படுகிறது.

அதாவது, விசாகப்பட்டணத்திலிருந்து தென்கிழக்காக 610 கிலோமீற்றர் தூரத்திலும் கோபாலூரிலிருந்து தெற்கு-
தென்கிழக்காக 630 கிலோமீற்றர் தூரத்திலும் மையங்கொண்டுள்ளது.

இந்த சூறாவளிப்புயலானது தொடர்ந்தும் வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து, மீண்டும் வலுவடைந்து மிகவும் வலுவான சூறாவளிப்புயலாக (Very severe Cyclonic Storm), ஆக அடுத்த 12 மணிநேரத்தில் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னர் இச்சூறாவளியானது, வடஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டிணம் அருகே 12ம் திகதி ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூறாவளியின் மையப்பகுதியை நோக்கிய காற்றின் அதிகூடிய வேகமானது மணிக்கு 100 கிலோ மீற்றர் தொடக்கம் 120 கிலோமீற்றர் வரை என அண்ணளவாக அளவீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மையப்பகுதியிலுள்ள வளிமண்டல அமுக்கமானது 988 ஹெக்டபஸ்கால் (மில்லிபார்) எனவும் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இச்சூறாவளியினால் நேரடியான பாரியதாக்கம் எதுவும் இலங்கையில் இல்லாத போதும், இலங்கையிலும் தீவைச்சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களிலும் பலமான காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். இது பின்னர் வடமேற்கு பிராந்தியத்திற்கும் பரவும்.

அத்துடன் ஊவா, கிழக்கு முற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை காணப்படும். இந்த இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் காற்று பலமானதாக வீசும்.

கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைத்தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

புத்தளம் முதல் மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியம் மற்றும் காலி முதல் அம்பாந்தோடடை ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் தொடக்கம் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசுவதனால் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related Posts