Ad Widget

வலி.வடக்கு மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் – யாழ். இராணுவத் தளபதி

Major General Udaya Perera-armyவலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்றும், அதுவரை அவர்கள் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ செய்ய வேண்டாம் என்றும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா கேட்டுக் கொண்டுள்ளார்.

வலி.வடக்கு மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களின் தலைவர்களுக்கும், இராணுவத் தளபதிக்கும் இடையில் நேற்று மாலை பலாலி இராணுவக் கட்டளைத் தலைமையகத்தில் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.

இந்தச் சந்திப்பிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்தோர் தொடர்பில் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. நீங்கள் ஒரு புள்ளி விவரங்களைக் கொண்டு வருகின்றீர்கள். பிரதேச செயலகம் வேறொரு புள்ளி விவரம் தருகின்றது.

மீள்குடி யேற்ற அமைச்சு இன்னொரு புள்ளி விவரத்தைத் தருகின்றது. எனவே வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் சரியான புள்ளி விவரங்களை முதலில் திரட்டுங்கள்.

வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை வேறாகவும், அவர்களின் வம்சம் பெருகியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை வேறாகவும் தயாரியுங்கள்.

முகாமில் உள்ளவர்கள், உறவினர், நண்பர்கள் வீடுகளிலுள்ளவர்கள், யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ளவர்கள் என்று தனித்தனியான விவரங்களைத் தயாரியுங்கள்.

மீள்குடியமர்வுக்கு விருப்பமானவர்களின் பெயர் விவரங்களைத் தனியாகவும் திரட்டுங்கள். இந்தத் தகவலை எவ்வளவு விரைவாகத் திரட்டித் தருகின்றீர்களோ, அவ்வளவு விரைவாக உங்களை, உங்கள் சொந்த இடங்களிலேயே மீளக் குடியமர்த்த முடியும்.

பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்புக்குச் சுவீகரிக்கப்பட்ட பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளை விடுவிக்க முடியும். பலாலிப் பகுதியில் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முகாமிலுள்ளவர்கள் முதலிலும் பின்னர் உறவினர், நண்பர்கள் வீடுகளிலுள்ள வர்களும் அதன் பின்னர் யாழ்.மாவட்டத்துக்கு வெளியே உள்ளவர்களும் கட்டம் கட்டமாக மீளக்குடியமர்த்தப்படுவர்.

அவர்களின் சொந்த இடங்களிலேயே அவர்கள் மீளக் குடியமரமுடியும். அதுவரை நீங்கள் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ செய்ய வேண்டாம். உங்கள் மீள்குடியமர்வு நடவடிக்கையைத் துரிதப்படுத்து வதற்காக ஒரு இராணுவ அதிகாரியை நியமித்துள்ளேன்.

அவருடன் கலந்துரையாடி நீங்கள் உங்கள் வேலையை முன்னெடுக்க முடியும். நீங்கள் சரியான தகவல்களை எவ்வளவு விரைவாகச் சமர்ப் பிக்கின்றீர்களோ அந்தளவு விரைவாக மீள்குடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

Related Posts