Ad Widget

வலி. வடக்கில் 227 ஏக்கர் காணி சத்தமின்றி சுவீகரிக்கப்படுகிறது!

வலிகாமம் வடக்கில் 227 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள இரகசிய நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காணிகளை சுவீகரிப்பதற்குரிய கடிதங்கள் நேற்று (வியாழக்கிழமை) அக்காணிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலையே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காணிகளை சுவீகரித்து கடற்படை முகாம், சுற்றுலாத்தலம் அமைப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அக்காணிகளின் உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் காங்கேசன்துறை மத்தி மற்றும் நகுலேஸ்வர கிராம சேவகர் பகுதிகளை உள்ளடக்கியதாக 227 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலாளரை அண்மையில் கொழும்பிற்கு அழைத்து இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக கூறப்படுகின்றது.

இக்காணிகள் அபகரிக்கும் பணிகள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் காணிகளை சுவீகரிப்பதற்குரிய கடிதங்கள் அக்காணிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரியவந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இவ்விடயம் தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய வடக்கு ஆளுநர் மற்றும் பிரதமருடன் இது தொடர்பாக கலந்துரையாடி காணி சுவீகரிக்கும் செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக தனியார் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதாக ஐனாதிபதி கூறியிருந்தும், காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் காணி சுவீகரிப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts