யாழ்.மாநகரசபை தற்காலிக சுகாதார பணியாளர்களை நிரந்தரமாக்கும் விடயத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள மாகாணசபை உறுப்பினரும், உள்ளூராட்சி அமைச்சு விடயங்களை கையாளும் அங்கீகாரமளிக்கப்பட்ட உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வர்த்தக நிலையங்களின் கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகளை அகற்றும் பணியை தனியாருக்கு வழங்குவதிலும் எதுவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மாநகரசபையில் தற்காலிகமாக கடமையாற்றும் சுகாதார ஊழியர்களது நிரந்தர நியமனம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதி குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
யாழ் மாநகர சபையில் கடமையாற்றும் தற்காலிக சுகாதார ஊழியர்கள் 197 பேர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி கடந்த செப்டெம்பர் மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் உள்ளூராட்சி அமைச்சும், அந்த அமைச்சுசார் விடயங்களை கையாளும் அங்கீகாரம் அளிக்கப்பட்ட உறுப்பினரான சிவாஜிலிங்கமும் சுகாதார பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போது குறித்த ஊழியர்களது நிரந்தர நியமனத்திற்கு விரைவில் உரிய தீர்வு பெற்றுத்தருவதாகவும் அதற்கு காலஅவகாசம் வழங்குமாறு கோரியதனையடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதன்போது கருத்து வெளியிட்ட வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,
197 தற்காலிக ஊழியர்களில் 39 பேருக்கு தற்போது நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதேபோன்று ஏனையவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.
மேற்படி ஊழியர்கள் 10 நாட்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தம் மேற்கொண்ட காலத்திற்கான சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான நாட்களுக்கு அவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நிறுத்தப்பட்ட கொடுப்பனவை கடனடிப்படையில் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மற்றும் மாநகரசபை ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அது தொடர்பில் விரைவில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை வர்த்தக நிலையங்களின் கழிவுகளை அகற்றுவதற்கும், விலங்கு கழிவுகளை அகற்றுவதற்கும் தனியார் துறையிடம் இருந்து கேள்வி கோரல் விடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும்,
இந்த விடயம் குறித்து மாநகரசபை ஆணையாளர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாகவும், தனியார் துறையினரிடம் இதனை ஒப்படைப்பதனால் மாநகரசபை ஊழியர்கள் குறைக்கப்படமாட்டார்கள் எனவும் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் இந்த விடயம் தொடர்பாக மாறுபட்ட கருத்து உள்ளதாகவும் ஆனால் குறித்த விடயத்தை தான் சரியாக அவர்களுக்கு கூறியிருப்பதாகவும் கருத்து வெளியிட்டார்.
அத்துடன் மாநகரசபைக்குள் வேறுவேலைகளுக்கும் பணியாளர்கள் இல்லாமையினால் வெற்றிடங்கள் உள்ளதாகவும் அவ்வெற்றிடங்களுக்கு அவர்களை இணைத்துக்கொண்டு நிரந்தர நியமனத்தை வழங்குவது தொடர்பாக பேசுவதாகவும் தெரிவித்ததுடன்,
தைமாத பிற்பகுதியில் முதலமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகரசபை அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் நல்ல முடிவுகள் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.