Ad Widget

வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம்

ayngaranesanஇம் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதியை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு தோறும் யூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபை சிறு தீவுகளும் கடல் மட்ட உயர்வும் என்பதைத் தேர்வு செய்ததோடு ‘உங்கள் குரலை உயர்த்துங்கள், கடல் மட்டத்தை அல்ல’ என்பதை இத்தினத்துக்கான உத்தியோகபூர்வ சுலோகமாகவும் அறிவித்துள்ளது. பூமி வெப்பம் அடைவதால் கடல் மட்டம் உயர்ந்து சிறு தீவுகளை மூழ்கடிக்கவுள்ள அபாயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கருப்பொருளைத் தேர்வு செய்தமைக்கான நோக்கம் ஆகும்.

இலங்கைத் தீவிலும் சமதரையையும் தாழ்வான நிலப்பகுதியையும் அதிக அளவில் கடல் நீரேரிகளின் ஊடறுப்புகளையும் கொண்டிருப்பதன் காரணமாக யாழ்ப்பாணக் குடாநாடு கடற்பெருக்கின் அபாயத்தை அதிகமாகவே கொண்டிருக்கிறது. அதிலும், குடாநாட்டின் நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு வேலணை, மண்டைதீவு என்று குடாநாட்டின் சிறுதீவுகள் அனைத்தையும் சத்தமில்லாமலே கடல்நீர் மூடிவிடும் ஆபத்து இன்னும் அதிகமாக நிலவுகிறது என்று சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் கரையைத் தாண்டாமல் தடுப்பதற்காக இயற்கை கடல் எல்லையில் பவளப் பாறைகள் மணல் மேடுகள், கண்டற்காடுகள் என்று பல அடுக்குகளில் போட்டு வைத்திருக்கும் பாதுகாப்பு அரண்கள் அனைத்தையுமே நாம் மிகை நுகர்வுக்கு உட்படுத்திச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம்.

போரினால் அழிந்த எமது சூழல் எமது இயற்கை விரோதச் செயற்பாட்டின் காரணமாக மேலும் மேலும் பாதிக்கப்படுவதால், பாரம்பரியமாக நாம் வாழ்ந்த மண்ணில் இருந்து சூழல் அகதிகளாக இடம்பெயரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாகப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு யூன் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியை வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளது.

இக்காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாகக் கல்வி அமைச்சுடன் இணைந்து கருத்தரங்குகள், கடற்கரையோரத்தைச் சுத்தப்படுத்தும் சிரமதானம், மரநடுகை போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள 1077 பாடசாலைகளுக்கும் இது தொடர்பான சுற்றுநிருபமும், பிரசுரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள் மாத்திரமல்லாது வடமாகாணத்தின் உள்ளூராட்சிமன்றங்கள், சனசமூக நிலையங்கள் போன்ற பொது அமைப்புக்கள் யாவற்றையும் இந்த ஒருவார காலப்பகுதியை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்கும்படி வேண்டுகிறோம்.

நாமும் வாழ்ந்து நமது வருங்காலச் சந்ததிகளும் இந்த மண்ணில் வாழ்வாங்கு வாழ வழிசமைப்போம்.

Cover

Related Posts