Ad Widget

வடக்கு விவசாய அமைச்சுக்கு 20 மில்லியன் பெறுமதியான நீர்த்தாங்கி வாகனங்கள் அன்பளிப்பு

பளையில் காற்று மின் ஆலைகளை நிர்மாணித்துவரும் யூலிபவர் மற்றும் பீற்றாபவர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் இணைந்து வடக்கு விவசாய அமைச்சுக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு தண்ணீர்த்தாங்கி வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன.

3

நேற்று வெள்ளிக்கிழமை (07.11.2014) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற இவ்வாகனங்களின் கையளிப்பு நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு வாகனங்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பளை பிரதேச செயலர் பிரிவில் புலோப்பளையிலும் வள்ளிமுனையிலும் யூலிபவர், பீற்றாபவர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் காற்று மின் ஆலையை நிர்மாணித்து வருகின்றன. இந்நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தின் வரட்சி நிவாரணம், குடிநீர் வழங்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற திட்டங்களுக்கு வணிக நிறுவனங்களுக்குரிய சமூகக்கடப்பாடாக நிதி உதவி வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை வடக்கு மாகாணசபையுடன் செய்துகொண்டுள்ளன.

20 வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் முதல் 10 வருடங்களுக்கு ஆண்டுதோறும் 20 மில்லியன் ரூபாய்களையும், அடுத்த 10 வருடங்களுக்கு ஆண்டுதோறும் 23 மில்லியன் ரூபாய்களையும் வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கு நன்கொடையாக இந்நிறுவனங்கள் வழங்கவுள்ளன.

இதன் தொடக்கமாக, 2014ஆம் ஆண்டுக்குரிய 20 மில்லியன் ரூபாய் நன்கொடையில் 06 தண்ணீர்த்தாங்கி வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 05 வாகனங்கள் நேற்று வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கையளிக்கப்பட்ட நிலையில், மற்றைய வாகனம் விரைவில் கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தண்ணீர்த்தாங்கி வாகனங்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டுவரும் குடிநீர் விநியோகச் சேவையில் பயன்படுத்தப்படவுள்ளன.

காற்று மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாணசபையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் நிறுவனத்தின் பணியாளர்களில் 80 விழுக்காடு பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல்வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்காற்று மின்னாலை வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரும் மூலதனத்துடன் கூடிய முதலாவது தனியார் முதலீடு என்பதோடு, இந்நிறுவனங்களின் நன்கொடையே வடக்கு மாகாணசபைக்குக் கிடைத்த முதலாவது பெரும் நன்கொடை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாகனங்களைக் கையளிக்கும் நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யூலிபவர், பீற்றாபவர் நிறுவனங்களின் உயர்மட்டப் பிரதிநிதிகள், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன், மாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர் சோ.சிவபாதம், உதவி நீர்ப்பாசனப்பணிப்பாளர் சோ.சண்முகானந்தன், பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் ந.சுதாகரன், உதவி விவசாயப் பணிப்பாளர் ஜெயதேவி ஜெகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.


மேலும் படங்களுக்கு..

Related Posts