வடக்கு மாகாணத்தில் உள்ள நூலகங்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதகத்தினால் தமிழ் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றன.
வடக்கு மாகாணத்தில் உள்ள நூலகங்களுக்கு வழங்கவென 1700 நூல்கள் பிரதி துணைத்தூதுவர் எஸ் . தட்சணாமூர்த்தியினால் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டன.
குறித்த நூல்கள் இந்துநாகரிகம், சமயம், விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பம், சமையல், கதை, தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டதும் அண்மைய ஆங்கில நூல்கள் போன்றனவும் அடங்கும்.
ஆறு தொகுதிகளும் 269 தலைப்புகளில் அமைந்த பல பாகங்களை உள்ளடக்கிய 341 புத்தகங்களைக் கொண்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் செயற்பட ஆரம்பித்த பின்னர் கல்விப்புலத்தில் முன்னிலையிலுள்ளோர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடியதில் பல மாவட்டங்களின் நூலகங்களில் புதிய தமிழ்ப்புத்தகங்களின் சேர்க்கை அவசியமாகவுள்ளதை அறிந்துகொண்டோம்.
இதன்பிரகாரம் புதுடில்லியிலுள்ள வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் இந்தியத் துணைத் தூதரகம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்களை ஐந்து மாவட்ட நூலகங்களுக்காக இந்தியாவில் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கென கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்கள் ஏற்கனவே பல்கலைக்கழகதத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டுவிட்டன. அத்துடன் துணைத்தூரகத்தில் ஒரு நூலகத்தையும் கொண்டுள்ளது. இங்கு ஹிந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் பல விடயங்களிலான ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
வேலை நாள்களில் காலை 10.30 முதல் 12.30 மணி வரையும் மாலை 2.30 முதல் 4.30 மணி வரையும் தூதரக நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.