Ad Widget

வடக்கு நீர் நிலை உயிரினங்களை நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்யலாம்

வடமாகாண நீர் நிலைகளில் பெருகி வரும் உயிரினங்களை நல்ல விலைக்கு சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என வியட்நாம் தூதுவர் டோன் சின் தான்ங் தன்னிடம் கூறியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

vicky-1

யாழ் வந்துள்ள வியட்நாம் தூதுவர் டோன் சின் தான்ங் நேற்று காலை 11.30 அளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அச் சந்திப்பின் பின்னர் முதலமைச்சரால் ஊடகங்களுக்கு செய்தி குறிப்பொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அச் செய்தி குறிப்பிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தம் நாட்டினால் வழிநடத்தப்படும் நீர்வாழ் உயிர் சம்பந்தமான வியட்நாம் தொழில்நுட்ப உதவித் திட்டம் என்ன விதத்தில் கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன என்பதைப் பார்வையிட அவர்கள் வந்துள்ளார்கள்.

நாட்டின் பல பாகங்களிலும் பரிசீலனை செய்ததில் வடமாகாணமே நீர் வாழ் உயிரினங்களை வளர்த்தெடுக்குந் தொழிலுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்பது கண்டு இங்கு எம் மாகாணத்தில் தொழில் நுட்பப் பயிற்சிகளையும் பாடங்களையும் கொடுத்து வருகின்றனர்.

பட்டம் பெற்ற இரு வாலிபர்களைத் தம் நாட்டுக்கழைத்து அங்கு தமது தொழிற்சாலைகளைப் பார்வையிடவும் பயிற்சி பெறவும் உதவியதாகக் கூறினார்.

அவர்கள் இங்கு வந்து தொடங்கியுள்ள வழிகாட்டல் ஆரம்பத் திட்டமானது ஏற்கனவே வெற்றி கண்டுள்ளது.

உள்நாட்டு நீர் நிலைகள் எங்கள் வடமாகாண சபையின் அதிகாரத்தினுள் வருவதால் மேலும் மேலும் இப்பேர்ப்பட்ட நீர் வாழ் உயிரின இனப் பெருக்கத்திற்கான விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தால் காலா காலத்தில் உள்ளூர் நீர் நிலைகளில் பெருகி வரும் உயிரினங்களை, மீன்களை, கடலட்டைகளை, காணிப் பாசிகளை எல்லாம் நல்ல விலைக்கு சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என தெரிவித்தனர்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் போரினால் பாதிக்கப்பட்டு எதுவுமே இல்லாத ஒரு நிலையில் இருந்த வியட்நாம் இன்று பல இலட்சம் டொலர்களுக்கு மீன் ஏற்றுமதி செய்வதாகவும் தமது நாடு பொருளாதார மேம்பட்டு வருவதாகவும் அறிவித்தார்.

மேற்படி தொழில் நுட்பப் பயிற்சி முறைகளின் வெற்றிக்கு வித்திடும் விதத்தில் தாம் தொடர்ந்து எமக்குப் போதிய உதவிகளை வழங்கப் போவதாகவும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

இச் சந்திப்பின் பின்னர் வடமாகாண ஆளுநரைச் சந்திக்க போவதாகவும் அதன் பின்னர் வேலைத்திட்டம் நடைபெறும் பிரதேசங்களைப் பார்வையிடப் போவதாகவும் அவர் என்னிடம் அறிவித்து விடைபெற்று சென்றார் என அச் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related Posts