Ad Widget

வடக்கு கால்நடை அமைச்சால் அனலைதீவில் நல்லின ஆடுகள் வழங்கி வைப்பு

வடமாகாண கால்நடை அமைச்சால் அனலைதீவில் 25 தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அனலைதீவு ஐயனார் கோவிலடியில் நேற்று வெள்ளிக்கிழமை (30.12.2016) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கி வைத்துள்ளார்.

வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு பின்தங்கிய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும், போசணை மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்குடனும் நல்லின ஆடுகளை வழங்கும் தகர் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தின் ஒரு கட்டமாகவே அனலைதீவில் ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஆடுகள் வழங்கப்பட்ட அனைவருக்கும் ஆடுகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான கனியுப்புகளைக் கொண்ட கனியுப்புக்கல்லும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், கால்நடை வைத்திய அதிகாரிகள் ஜே.யூட் சுவேன், ச.நர்மஜன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Related Posts