Ad Widget

வடக்குமாகாண சபை உறுப்பினர்களின் உணவை ஊடகவியலாளர்கள் உண்கிறார்களாம்! -தவிசாளர் சி.வீ.கே.சிவஞானம்

வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் இடையில் மதிய போசனத்தில் தம்முடன் இணைந்து ஊடகவியலாளர்கள் பங்கெடுப்பதனால் தமக்கு இடையூறு ஏற்படுவதாக தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சபை நிதியில் பரிமாறப்படும் உணவு மற்றும் தேனீர் போன்றவற்றை இன்று (டிசம்பர் 11) முதல் பகிஷ்கரித்துள்ளனர்.

வழமையாக ஊடகவியலாளர்கள் அவையினால் சகலருக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள உல்லாச விடுதியொன்றில் இருந்து பெறப்படும் உணவுகளை சுய பரிமாறலின் அடிப்படையில் பெற்று உண்டு வந்தனர். எனினும் திடீர் என இன்று அவையினர் ஊடகவியலாளர்களை உணவு மண்டபத்திற்கு அனுமதிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு குறித்த மண்டபத்திற்குத் செல்ல அனுமதிக்கப்படாது ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டனர்.

குறித்த உணவு மண்டபத்திற்குப் புறம்பாகவுள்ள மாடிக் கட்டடத்தின் கீழ்பகுதியில் சென்று ஊடகவியலாளர்களை அமருமாறும் இங்கு உணவு பரிமாறப்படும் எனவும் கூறப்பட்டது.அரச ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் உணவு உண்ணும் மண்டபத்திற்குள் ஊடகவியலாளர்கள் உண்பதற்கு என்ன தடை என அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் எமது உறுப்பினர்கள் பலர் தம்மிடம் ஊடகவியலாளர்கள் தமது மண்டபத்திற்குள் உணவு உண்ண அனுமதிக்கப்படுவதால் தமக்கு உணவுகள் போதாது உள்ளதாகவும் நெரிசலாக உள்ளதாகவும் தம்மால் ஏற்றவாறு உணவு உண்ண முடியாதுள்ளதாகவும் முறையிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதை நீங்கள் எழுதினாலும் பிரச்சினையில்லை என்றார். இதனையடுத்தே தான் ஊடகவியலாளர்களை அலுவலகர்கள் மக்கள் பிரதிநிதிகள் உணவு உண்ணும் மண்டபத்திற்கு அனுமதிக்கக் கூடாது என்றுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சாப்பாட்டு வேளை என்பது, நாம் அமைச்சர்கள மற்றும் உறுப்பினர்களிடம் பேட்டிகள், பிரச்சினைகள் போன்றவற்றினைப் கருத்துப் பகிர்வதற்கும் உதவக்கூடியது எனவும் அதேவேளை ஊடகவியலாளர்களுக்கு உணவு உண்பதற்கு அடிப்படைச் சுகாதாரம் அற்ற இடத்தில் உணவு பரிமாறுவதை ஏற்கமுடியாது. இது எமது தொழில் கௌரவத்தினைப் பாதிக்கும் விடயம் எனவும் கூறிவிட்டு உணவைப் புறக்கணித்து வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து தமக்கிடையே கலந்துரையாடிய ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் எப்படியும் நடக்கலாம் அதற்காக நாம் மக்களுக்கு சரியான பிரச்சினைகளைக் கொண்டு சேர்க்க வேண்டியது தமக்கான பணி உயிர் அச்சுறுத்தலிலும் கைவிடப்படமுடியாதது. ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் தமது நலன்களுக்காக எதையும் கூறலாம் ஆனால் நாம் இதற்காக மாகாண சபையில் ஊடகப் பணியை முன்னெடுக்காமல் விடுவது ஊழல்களுக்கு வலுச் சேர்க்கும் என்பதை கூட்டாக முடிவெடுத்து கடமையில் ஈடுபட்டனர்.

மக்கள் பிரதிநிதிகள்  யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப் பெரிய உல்லாச விடுதியின் சாப்பாடுகளை (புரியாணி, கோழி இறைச்சி, விலையுயர் ஐஸ்கிறீம், பழ கலவை, தேனீர் இடைவெளியில் செலவு மிக்க மேலைநாட்டு பாரம்பரிய சிற்றூண்டிகள்) தான் உண்கின்றனர். தமிழ்தேசிய சபையாகத் தெரிவு செய்யப்பட்ட இச் சபை, தீர்மானத்தின் மூலம் சாதாரண உள்ளூர் உணவு நிறுவனம் ஒன்றிடம் சற்று மலிவான விலையில் உணவைப் பெற்று அதன் மூலம் எஞ்சும் பணத்தில் மக்களுக்கான திட்டங்களை வழங்கக் கூடாதா என நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் தமக்குள் குறைபட்டுள்ளனர்.

நேற்று முன்தினமும் ஊடகவியலாளர்கள் தமக்கான தொழில் வசதிகள் விடயத்தில் மாகாண சபையில் உள்ள குறைபாட்டினைச் சுட்டிக்காட்டியபோது அதற்கு நீங்கள் வெளியேறலாம் என வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளர் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்களின் பணியின் தாற்பரியம் மற்றும் ஜனநாயக ரீதியில் அதன் முக்கியத்துவம் அறியாது தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குப் பெற்று ஆட்சிபீடமேறிய சபை இவ்வாறு நடந்து கொள்வது விசனத்திற்கு உரியதொன்றாக பார்க்கப்படுகின்றது.

Related Posts