சுனாமிக்கு பின்னர் வடக்கில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம், ஒரு வீட்டைக்கூட நிர்மாணிக்காமல் 1,470 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணை குழு அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார்.
இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பிரிவு தெரிவித்துள்ளது.
விசேட பொலிஸ் விசாரணை பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அதிகாரி மேவன் சில்வா தலைமையிலான குழுவே விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்த விசேட குழுவினால் கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதாக பொறுப்பேற்று கொண்ட நிறுவனத்தின் தெஹிவளை, கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்களின் முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் மட்டுமன்றி அந்த நிறுவனமே போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
வீடு நிர்மாணிக்கப்பட்டுவிட்டதாக வழங்கப்பட்ட காசோலை, ஆடை உற்பத்தி நிறுவனத்தின் முகவரிக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவர் மற்றும் பெண்ணை, நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினரின் தலைமையிலான இந்த நிறுவனத்துக்கு திறைசேரியினால் 65 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவு அறிவித்துள்ளது.