Ad Widget

வடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் – சஜித்

வடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் என புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் திங்கட்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு மெரைன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின்போது பல்வேறு விடயங்கள் குறித்து அமைச்சர் சஜித்திடம் கேள்வியெழுப்பப்பட்டன.

அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் காணிகள் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வன பரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள்? என கேள்வியெழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு பதில் வழங்கும்போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் இருக்கின்ற அனைத்து சமூகத்தவரும் பின்பற்றக்கூடிய பாரம்பரிய கலாசாரம் சார்ந்த புராதன தொல்பொருள் நிலங்கள், அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் பகுதிகள் ஆகியவற்றை பாதுகாப்பது எமது கடமையாகும்.

வடக்கு, கிழக்கில் மக்களால் பல வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த காணிகள் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்டதாக அறிகிறேன். அதன் உண்மை தன்மை குறித்து நிச்சயமாக ஆராய்வேன். அவை தேவையில்லாமல் அபகரிக்கப்பட்டிருந்தால் அவற்றை உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பேன்.

உண்மையில் அந்தக் காணிகளில் அரசாங்கத்தின் தேவைப்பாடுகள் இருப்பின், அதற்கான மாற்றுக் காணிகளை அல்லது அதற்குரிய நஷ்டயீடுத் தொகையை உரிய காணியின் உரிமையாளரிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

இவ்விடயத்தில் அனைத்து இனங்களையும் கருத்திற்கொண்டு, யாரையும் பாதிக்காத வகையில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்வேன். மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தி அவர்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கே முதலில் முக்கியத்துவம் கொடுப்பேன். வளங்கள் நீடித்து நிலைபெறும் செயற்பாட்டுக்கு கவனம் செலுத்துவேன்” என தெரிவித்தார்.

Related Posts