WhatsApp ஆபாச காணொளி அழைப்பு மோசடி; பொது மக்கள் எச்சரிக்கை!

ஆபாசமான காணொளி அழைப்புகள் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான மோசடி குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளதுடன், பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT), கேட்டுக்கொண்டுள்ளது.

CERT-இன் கூற்றுப்படி,

மோசடி செய்பவர்கள் முதலில் போலி கணக்குகள் மூலம் தனிநபர்களில் சமூக ஊடக வலைப்பின்னல்களில் ஊடுருவி, பெரும்பாலும் முகநூலில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்புகளைக் குறிவைக்கின்றனர்.

அதன்பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ அழைப்பின் வாயிலாகத் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள்; அந்த அழைப்பில் பொதுவாக ஒரு நிர்வாண கோலத்தில் பெண் இடம்பெற்றிருப்பார்.

அந்த அழைப்பின் போது, ​​மோசடிக்காரர்கள் அந்த உரையாடலைப் பதிவுசெய்து, பாதிக்கப்பட்டவரின் முகத்தையும் படம் பிடிக்கிறார்கள்.

பதிவுசெய்யப்பட்ட அந்தக் காணொளி பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது

அதில் மோசடிக்காரர்கள் பணம் கோருவதோடு, பணம் செலுத்தாவிட்டால் அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே, அடையாளம் தெரியாத காணொளி அழைப்புகளில் ஈடுபட வேண்டாம் என்றும், அத்தகைய சம்பவங்கள் குறித்து உடனடியாகப் முறைப்பாடு அளிக்குமாறும் இலங்கை CERT பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை CERT-ஐ 101 என்ற துரித எண் மூலமாகவோ அல்லது report@cert.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கலாம்.

Related Posts