Ad Widget

வடக்கில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி அமைக்கும் பணியைத் துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆள்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கை மற்றும் வடக்கு மாகாணத்தில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியை அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பாகநேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், ஒவ்வொரு பிரிவினதும் செயற்பாடுகள் பற்றி அவர்கள் விளக்கமளித்தனர்.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் பொலிஸ் திணைக்களத்திடம் எதிர்பார்ப்பது பட்டம், பதவி, கட்சி என்ற எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைவருக்கும் ஒன்று போல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொலிஸ் சேவையாகும்.

எனது அரசியல் வாழ்க்கையில் குற்றவாளிகள் பற்றி பேசுவதற்கு நான் எந்தவொரு பொலிஸ் நிலையத்திற்கும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதில்லை.

மக்கள் நேய சேவையை வழங்கும் அதேநேரம் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கையை எடுத்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் மேற்கொள்வதற்கு பொலிஸ் சேவையில் உள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

மேலும் பொலிஸ் திணைக்களத்தின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து அதன் முன்னேற்றத்திற்காக நடவடிக்கை எடுப்பது போன்று நாளாந்தம் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விஞ்ஞானபூர்வமாக தயாரிக்கப்பட்ட முறைமையொன்று அவசியமாகும்.

இதற்காக நிபுணர்களின் உதவியை பெற்று உரிய முறைமையொன்றை தயாரிக்க வேண்டும். முன்னைய முறைப்பாடுகள் பற்றி ஆராய்ந்து குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நிகழ்ச்சித்திட்டங்களின் அடிப்படையில் அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

அபிவிருத்தியடைந்த நாடொன்றின் பண்பு பொலிஸ் நிலையம் அல்லது சிறைக்கூடங்களை அதிகரிப்பதன்றி குற்றங்களை தவிர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய சமூக மாற்றம் பற்றி கவனம் செலுத்துவதாகும்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொள்கை ரீதியான தீர்மானமொன்று இல்லாமல் பொலிஸ் நிலையங்களை தாபிப்பதன் மூலம் ஏற்படும் பௌதீக வளம் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தியதுடன், எதிர்காலத்தில் பொலிஸ் நிலையங்களை தாபிக்கும் போது ஒரு குழுவொன்றின் ஊடாக அது பற்றி தீர்மானம் மேற்கொள்வதை கொள்கை சார்ந்த விடயமாக நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.

இதன் போது அப்பிரதேசத்தின் மக்கள் தொகை, கிடைக்கும் முறைப்பாடுகள் உள்ளிட்ட ஏனைய பின்னணிகள் பற்றி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் மொழி பேசக்கூடிய பொலிஸ் அதிகாரிகளை ஆள்சேர்ப்பு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் கேட்டறிந்த ஜனாதிபதி, இந்த விடயத்தை மேலும் பலப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.

கணனி குற்றங்களை ஒழிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகளை பயிற்றுவித்தல் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன், வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இதே நேரம் கொழும்புக்கு வெளியே பிரதான வைத்தியசாலைகளில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தனியான விடுதித் தொகுதிகளை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

மேலும் தூரப் பிரதேசங்களில் இருந்து கடமை நிமித்தம் கொழும்புக்கு வரும் பெண் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளின் வசதிகளை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

பொலித்தீன் தடையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், தூரப்பிரதேச பேருந்து வண்டிகளில் இடம்பெறும் கப்பம் வாங்கும் விடயம் பற்றியும் குறிப்பிட்டார். அது பற்றி துரிதமாக கவனம் செலுத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸ் திணைக்களத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

திருப்தியாக தனது மக்கள் சேவையை வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களத்தின் கீழ் வகுப்பு அதிகாரிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் கட்டம் கட்டமாக தீர்வுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் குற்றங்களை ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களிலும் பொலிஸ் திணைக்களம் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி, பொலிஸ் திணைக்களத்தை தனக்குக் கீழ் கொண்டுவந்தது முதல் தனக்கு அனைவரும் வழங்கும் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்தார்- என்றுள்ளது.

Related Posts