Ad Widget

வடக்கில் புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உடனடி அவசியம்! – டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாணத்தில் உள்ள புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா மற்றும் புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள்,

மேற்படி புகையிரதப் பாதை மீள அமைக்கப்பட்டபோது உரிய தரப்பினர் என்னிடம் கலந்தாலோசிக்காத நிலையில், பல தவறுகள் இடம்பேற்றிருந்தன. இதனை அறிந்து, அப்போதைய போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடி அவ்வப்போது பல திருத்தங்களை மேற்கொண்டிருந்தேன்.

குறிப்பாக, புகையிரதக் கடவைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், குறுக்கு வீதிகளுக்கான புகையிரதக் கடவைகள் மற்றும் புகையிரதப் பாதை அதிகளவில் உயர்த்தப்பட்டமை காரணமாக அண்டிய குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இதனால் புகையிரதக் கடவைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட பல தேவைகள் கைவிடப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக நிறைவேற்ற உடனடி நடவடிக்கைகள் தேவை. குறிப்பாக, புகையிரதக் கடவைகளின் பாதுகாப்பின்மை காரணமாக நாளுக்கு நாள் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உடன் மேற்கொள்ளும்படி போக்குவரத்து அமைச்சரிடமும், புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளரிடமும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts