தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் (02) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளை அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகங்கா, மதகுருமார்கள், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர், துறைசார்ந்த அரச அதிகாரிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இத் திட்டத்திற்காக அமைச்சினால் ரூபா. 8.9 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

பின்னர் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதையடுத்து கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், அதிதிகள் உரைகள் இடம்பெற்றன.

அதன் பின்னர், வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கான ஆவணத்தை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள் தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக உறுப்பினர்களிடம் கையளித்தார்.

Related Posts