Ad Widget

வடக்கில் பாரிய தொழில் மையங்களை மீள இயக்க அமைச்சரவை அங்கீகாரம்

ஆனையிறவு உப்பளம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளை மீள இயக்கி, அவற்றினூடாக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், ஆனையிறவு உப்பளத்தை மீள இயக்குவதற்கான ஆரம்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அடுத்த ஆண்டு முற்பகுதியில், உப்பளத்தின் தொழிற்துறை சார்ந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது முதற்கட்டமாக 25,000 மெற்றிக் தொன் உப்பை உற்பத்தி செய்ய முடியும்.

இதேபோன்று, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை நவீன முறையில் நிர்மாணித்து அதனூடாக குளோரின் சார்ந்த இரசாயன உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை புனரமைத்து மீள இயக்கும் வகையில் முதற்கட்டமாக அரைத்து பொதியிடல் செய்வதற்கும், ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை நவீனப்படுத்தி உற்பத்தியை மேம்படுத்துவதற்குமான திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, அவர்களை சார்ந்து வாழும் குடும்பங்களது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் மென்மேலும் முன்னேற்றமடையும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே குறிப்பிட்ட தொழிற்சாலைகளின் தொழிற்துறை நடவடிக்கைகளை, சூழல் மாசடையாதவாறு நவீன தொழில்நுட்பங்களூடான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது கவனத்தில் கொள்ளப்படும் என்றும் மேற்படி யோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts