Ad Widget

வடக்கில் ஏன் புலிக்கொடியை ஏற்றமுடியாது? : சிறிதரன்

தேசிய கொடியில் உள்ள சிறுபான்மை இனங்களை குறிக்கும் நிறங்களை நீக்கிவிட்டு சிங்கக் கொடியை வடக்கில் ஏற்ற முடியும் என்றால், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை நீக்கிவிட்டு ஏன் புலிக் கொடியை தமிழ் மக்கள் வடக்கில் ஏற்ற முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிதி அமைச்சின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

அண்மையில் தென்னிலங்கையில் இருந்து வந்த இளைஞர் குழுவொன்று கிளிநொச்சியிலுள்ள மின்கம்பங்களில் சிங்கக் கொடிகளை கட்டியதை சுட்டிக்காட்டிய சிறிதரன், இதனை பொலிஸாரும் வேடிக்கை பார்த்ததாகவும் சுட்டிக்காட்டினார். இவ்வாறு நாட்டில் பிரிவினை மற்றும் இனவாதத்தை தூண்டுகின்றவர்களை ஏன் பொலிஸார் கைதுசெய்து விசாரிக்கவில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.

அத்தோடு, நாட்டின் குழப்பத்தை ஏற்படுத்தி இனவாதத்தை தோற்றுவிக்கும் ஞானசார தேரர் அருகில் செல்வதற்கே தயங்கும் பொலிஸார், தமிழர்களை கைதுசெய்தும் அச்சுறுத்தியும் வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

Related Posts