Ad Widget

வடக்கில் இவ்வருடத்தில் 2122 பேர் டெங்குவினால் பாதிப்பு

வடமாகாணத்தில் 2014ஆம் வருடத்தின் இந்த மாதம் வரை 2 ஆயிரத்து 122 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக யாழ்.பிராந்திய வட மாகாண சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

கடந்தாண்டை விடவும் இந்த வருடம் மோசமான நிலை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களிலும் டெங்கு நோயின் தாக்கம் இவ்வாண்டு கடுமையாக உணரப்பட்டுள்ளது.

எனினும் யாழ். மாவட்டத்திலேயே குறிப்பாக வருடத்தின் இறுதிப்பகுதியிலேயே அதிகளவு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

டெங்கு நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தொற்றுக் குறைவாக உள்ள மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுவதாகவும் அதிகளவு நோய்த் தாக்கம் உள்ள மாவட்டமாக யாழ் மாவட்டம் காணப்படுவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் மட்டும் 93 டெங்கு நோயாளர்கள் சிகிச்சைகளுக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று மன்னார் மாவட் டத்தில் 22 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 பேரும், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் உள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

மேலும் இவ்வருடத்தின் மொத்த தகவல்களின்படி, யாழ்.மாவட்டத்தில் 1507 பேரும், மன்னார் மாவட்டத்தில் 297 பேரும், வவுனியா மாவட்டத்தில் 129 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 72 பேருமாக இவ்வருடத்தில் மொத்தமாக 2122 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts