Ad Widget

வடக்கில் இராணுவத்தை ஆளுநர் வழிநடத்துகிறார் – விந்தன் கனகரத்தினம்

vinthan-kanakaraththinamவட மாகாணத்திலுள்ள இராணுவத்தினரை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியே வழிநடத்துகிறார் என்று வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று சனிக்கிழமை (02) தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தின் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண ஆளுநர், இராணுவப் பின்புலங்களுடன் கூடியவர்கள். வடக்கில் கொள்ளை, கொலைகள், ஆட்கடத்தல்கள், ஊடகவியலாளர்கள் அடக்குமுறைகள், ஊடகவியலாளர்கள் கொலை ஆகியவை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, தற்போதய ஆளுநர் யாழ்ப்பாணத்தின் இராணுவத் தளபதியாக இருந்தவர்.

அந்தவகையில், இராணுவ நலன்சார்ந்த செயற்பாடுகளையே வடமாகாண ஆளுநர் மேற்கொண்டு வருகின்றார்.

அதற்காகவே, வடக்கு, கிழக்கில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி முன்னிலையில், வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்கும் போது, சிவில் சார்ந்த ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முதலமைச்சர் முன்வைத்திருந்தார்.

இருந்தும், அனைத்துக் கோரிக்கைகளையும் ஜனாதிபதி உதாசீனப்படுத்தியுள்ளார். அந்தவகையில் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் வடமாகாண சபையைப் புறக்கணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மாநகர சபையின் மீது விசாரணைகள் ஆரம்பம்

யாழ். மாநகர சபையின் ஊழல்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதற்கு வட மாகாண முதலமைச்சரினால் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

அவர்கள் மாநகர சபையால், மேற்கொள்ளப்பட்ட வேலைவாய்ப்புக்கள், ஒப்பந்தங்கள், கட்டட ஒப்பந்தங்கள் மற்றும் கடைகளுக்கான அனுமதி வழங்கியமை உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி விசாரணை நடத்தவுள்ளனர்.

அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாநகர சபையில் முன்னிருந்த காலங்களில் நடந்த ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யப்படவேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்தவகையில், அவர் ஆதாரங்களுடன் நிரூபித்தால் அது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படும்.

மாநகர சபையின் முன்னர் 12 கோடி ரூபாய் இருப்பில் பணம் இருந்தது. இருந்தும் தற்போது எவ்வித பணமும் இல்லை. அனைத்தையும் தற்போதைய மாநகர சபை நிர்வாகம் செலவளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி வடமாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும்

வடமாகாண சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 40 இலட்சம் ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்ட நிதி வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக தலா 20 இலட்சம் ரூபாவே முன்னர் ஒதுக்கப்பட்டிருந்தது. இருந்தும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அந்நிதி 40 இலட்சமாக மாற்றப்பட்டது.

அத்துடன், முதலமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி 60 இலட்சம் ரூபாவாக காணப்படுகின்றது. மேற்படி அனைத்து நிதியும் வடமாகாண மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக கனகரத்தினம் மேலும் தெரிவித்தார்.

Related Posts