Ad Widget

வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்த இணைந்து செற்படத் தயார் – அமைச்சர் பசில்

வட பகுதி மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக நாம் வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

basil-rajapakse-pasil

திவி நெகும ‘சகன அருண’ வங்கித்திட்டம் தொடர்பில் ஊடகவியாலளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்கள ஊடக அபிவிருத்தி மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வட பகுதி மக்களின் நலன் கருதி அரசாங்கம் அப்பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுவருகின்றது. எனினும் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மந்தகதியிலேயே நடைபெற்றுவருகின்றன. வட மாகாண சபை மற்றும் வடக்கில் உள்ள பிரதேச சபைகள் மந்தகதியில் இயங்குவதால் அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போது யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் இந்தியாவின் உதவியுடன் ரயில் பாதைகளையும் ரயில் நிலையங்களையும் அரசாங்கம் அமைத்து வருகின்றது. எனினும் இனிமேல் யாழ்ப்பாணத்துக்கு ரயில் வராது என்ற முடிவில் சிலர் ரயில் பாதை அமைந்திருந்த இடங்களில் சட்டவிரோமாக வீடுகளைக் கட்டியுள்ளனர்.

இவர்களை அந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைக்கும் பிரதேச சபைகளுக்குமே உள்ளன. எனினும் அவர்கள் இது விடயத்தில் துரிதமாக செயற்படுவதில்லை. இதன் காரணமாகவே இத்திட்டத்தை உரிய காலத்தில் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாம் யாழ். ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தோம்.

வடக்கில் 270 புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 131 வங்கிகள் இயங்குகின்றன. விவசாய நடவடிக்கைள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்துவதற்காக அப்பிரதேசங்களில் ‘திவிநெகும’ திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு நான் வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனிடம் கோரிக்கை விடுத்தேன். அவர் உதவுவார் என நினைக்கிறேன் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல,அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரிய ரத்ன அதுகல, தகவல் ஊடக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் உட்பட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Posts