Ad Widget

லைக்காவின் நன்கொடையில் யாழ்.பல்கலைக்கு நவீன கட்டிடத் தொகுதி: அமைச்சரவை அனுமதி

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நன்கொடையாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு நவீன கட்டிடத்தை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும் நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் ஊடாக 740 மில்லியன் ரூபாய் முதலீட்டுடன் நவீன வசதிகளுடன் கூடிய துணைக் கட்டிடத்தொகுதி ஒன்று யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

1979 ஆம் ஆண்டில் 65 மாணவர்களைக் கொண்ட 1 ஆவது குழுவை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்பொழுது 937 மாணவர்கள் கல்வி கற்கும் பீடமாக வளர்ச்சியடைந்துள்ளது.

இதுவரையில் பல்லின மக்களின் கட்டமைப்பைக் கொண்டதுடன் வருடாந்தம் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அபிவிருத்தி கண்டிருந்த போதிலும் அதற்கு அமைவாக அவர்களுக்கு வசதிகளை செய்யும் வகையில் விரிவுரை மண்டபம், விஞ்ஞான பீடம், வகுப்பறை இருப்பிட வசதி முதலான அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கை இடம்பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை நவீனமயப்படுத்தும் விதமாக லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நன்கொடையிலான நவீன கட்டிடத் தொகுதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts