Ad Widget

ரௌடித்தனத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதிபதி இளஞ்செழியனின் எச்சரிக்கை!

மாவட்ட நீதிபதி அல்லது அரச அதிபர் தளத்தில் நின்று சட்டத்தைப் பயன்படுத்தி வன்செயலில் ஈடுபடும் கும்பலைக் கலைப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என ரௌடித்தனத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை வன்முறைகளில் அல்லது வன்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவினரை, சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பொலிஸார் அல்லது படையினரின் உதவிகொண்டு கலைப்பதற்கு சட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.இத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ரௌடித்தனத்தில் ஈடுபடும் இளைஞர்கள் இடமளிக்கக் கூடாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தியமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை என்ற குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட 20 வழக்குகளின் சந்தேக நபர்களுக்கான பிணை விசாரணையின் முடிவில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பின்போதே இந்த எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றது.

கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ள இந்த வழக்குகளில் நீதிபதி இளஞ்செழியன் அளித்துள்ள தீர்ப்பில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

வன்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று, அந்தக் கும்பலைக் கலைப்பதற்கு, மாவட்ட நீதிவானுக்கும் அரச அதிபருக்கும் குற்றவியல் நடவடி சட்டக் கோவையின் 95ஆம் பிரிவின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொலிஸ் அத்தியட்சகரும் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டளை பிறப்பிக்க முடியும். இந்தச் சட்ட விதியின்படி, நிலைமைக்கு அமைய, தேவை ஏற்பட்டால், பொலிஸாரே கலகக்கார்களை அல்லது வன்செயல் கும்பலைக் கலைப்பதற்கான கட்டளையைச் செயற்படத்தும்படி உத்தரவிடுவதற்கு மாவட்ட நீதிபதிக்கும், அரசாங்க அதிபருக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படின் இராணுவத்தை வரவழைத்து கட்டளையைச் செயற்படுத்தும்படி, நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவசியம் ஏற்படும் பட்சத்தில், பொதுமக்களுக்குக்கூட, கட்டளை பிறப்பித்து வன்செயலாளரைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது.

நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது நீதிபதி மற்றும் அரசாங்க அதிபர்களினால் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் நாட்டைவிட்டு சென்றதன் பின்னர் மாவட்ட நீதிபதிகளும், அரசாங்க அதிபர்களும் இந்தச் சட்டத்தை நடைமுடைப்படுத்துவதில்லை.

ஏனெனில் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் பிரகாரம், பாதுகாப்புப் படையினருக்கும், பொலிசாருக்கும் இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆயினும் குற்றவியல் நடவடிக்கைக் கோவையின் 95 ஆம் பிரிவின் கீழ் மாவட்ட நீதிபதிக்கும், அரசாங்க அதிபருக்கும் கலகம் ஏற்பட்டால், அல்லது வன்செயல்கள் ஏற்பட்டால், அவற்றில் ஈடுபட்டிருக்கும் கும்பல்களை, சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பொலிஸாருக்கு அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டளை பிறப்பித்து கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.

அதற்கான அதிகாரம் இருக்கின்றது. ஆகவே, இவ்வாறு வன்செயல்களில் ஈடுபடுபவர்களைக் கலைப்பதற்கான சட்டத்தை பயன்படுத்தும் நிலைக்கு மாவட்ட நீதிபதியையோ அல்லது அரசாங்க அதிபரையோ தள்ள வேண்டாம் என்று யாழ்ப்பாணத்தில் ரெளடித்தனங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு, இந்த பிணை விசாரணை வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில், நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.

Related Posts