Ad Widget

ரெலோவிடமிருந்து 20 சிங்களப் பொலிஸாரைக் காப்பாற்றிய தமிழ் பொலிஸ் அலுவலகர் மறைவு!

சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் காப்பாற்றியவர் என்று பாராட்டப்பட்ட தமிழ் பொலிஸ் அலுவலகர் பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை நேற்றுக் காலமானார். இயற்கை எய்தும் போது அவருக்கு வயது 82.

அவரது பூதவுடலுக்கு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று அஞ்சலி செலுத்தினார்.

பருத்தித்துறை நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பொலிஸாரின் முழு மரியாதையுடன் அவரின் இறுதி ஊர்வலம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது ரெலோ (தமிழீழ விடுதலை இயக்கம்) அமைப்பினர் 1984ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தினார்கள். அதன் போது அங்கு கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை , பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த 20 சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் நிலையத்தின் பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று, அங்கிருந்து காட்டு பாதையூடாக வான் ஒன்றில் அவர்களை ஏற்றி ஆனையிறவு இராணுவ முகாமில் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் 1962ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிளாக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டுள்ளார். அவரது சிறந்த சேவையால் பொலிஸ் சார்ஜன்ட் தர நிலைக்கு பதவி உயர்வுபெற்று 1990ஆம் ஆண்டு சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.

Related Posts