Ad Widget

ராஜீவ் கொலை: பேரறிவாளனுக்கு பதில் அளிக்குமாறு, சிபிஐக்கு உத்தரவு

ராஜீவ் கொலையின் உண்மையான சூழ்ச்சியாளர்கள் யார் என்பது குறித்து சிபிஐ பதில் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ நடத்திய விசாரணைகளின் முழு விவரங்களையும், ராஜீவ் கொலைச் சதி குறித்து, விசாரணை நடத்தி வரும் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும், தாக்கல் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இதன் மீது நீதிபதிகள் ரஞ்சன் கோகய் மற்றும் நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது பேரறிவாளன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் கூறியதாவது: ராஜீவ் கொலையை விசாரித்த சிபிஐ ஒரு பரபரபு சார்ந்த விசாரணையை மட்டுமே நடத்தியது. இந்த கொலையின் பின்னணியில் உள்ள சூழ்ச்சியாளர்கள், பற்றி விசாரிக்கவில்லை. இது குறித்தே பேரறிவாளன் கேள்வி கேட்பதாக ராஜீவ் தவன் கூறினார். அதன்போது குறுக்கிட்ட நீதிபதி கோகய், சரி பரபரப்பு ஓய்ந்துவிட்டது விசாரணை முடிவடைந்துவிட்டது.. இன்னும் இதில் சில அம்சங்கள் இருக்கிறதா? என எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராஜீவ் தவன், தடா நீதிமன்றமே இக்கொலையின் உண்மையான சூழ்ச்சியாளர்கள் யார்? என சிபிஐ விசாரிக்குமாறு கூறியுள்ளது என சுட்டிக்காட்டினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ராஜீவ் கொலையின் உண்மையான சூழ்ச்சியாளர்கள் யார் என்ற பேரறிவாளன் கேள்விக்கு பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Related Posts