Ad Widget

ரஜினி, அஜித்தை நோக்கி மீண்டும் அரசியல் பேச்சுக்கள்

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துப் பரிமாற்றங்கள், கருத்துக்கள், பதிவுகள் என ஒவ்வொருவரும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிமிடத்திற்கு ஒருமுறை புதுப் புது செய்திகள், உண்மையோ, பொய்யோ ‘வாட்ஸ்-அப்’ மூலம் பரவிக் கொண்டிருக்கின்றன.

rajini-ajith

தமிழ்நாட்டு அரசியலையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக திரையுலகத்தைச் சார்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டை ஆண்டு வருகிறார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளைத் தவிர மற்ற மொழித் தொலைக்காட்சிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சில ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலும் கூட ரஜினிகாந்தும், அஜித்தும் அரசியலுக்கு வருவார்களா என விவாதத்தை நடத்தி வருகின்றனவாம்.

ரஜினிகாந்த்தைப் பற்றிய அரசியல் பேச்சுக்கள் 1996ம் ஆண்டிலிருந்து இந்த 2016ம் ஆண்டு வரை தொடர்ந்து வந்து கொண்டேதானிருக்கின்றன. அவர் அரசியல் களத்தில் இறங்குவது சந்தேகம்தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே அஜித், அதிமுகவில் சேரப் போகிறார் என்ற வதந்தி இருந்து கொண்டேயிருந்தது. ஜெயலலிதா மறைந்த செய்தி பற்றி அறிந்ததும், அஜித்தும் பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்தும் விடுபட்டு, உடனடியாக விமானத்தைப் பிடித்து அதிகாலையில் சென்னை வந்து, நேரடியாக ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது இந்த அபிமானமான செயல் அவரைப் பற்றிய அரசியல் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளது.

வதந்திகள் விவாதங்களாக மாறியுள்ள சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கும் என திரையுலகத்தினரும், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Related Posts