நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தம் பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மீன்பிடித்தொழில், இறால் கூடு கட்டுதல், நண்டுக் கூடு கட்டுதல் போன்ற தொழில்கள் ஆண்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இன்று பெண்கள் பலர் குறித்த தொழில்களை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
காரைநகர், ஊரிக்காடு மற்றும் அராலித்துறைப் பகுதிகளில் சிறியரக மிதவைகளை பயன்படுத்தி இறால்ப் பிடிப்புத் தொழிலில் ஈடுபடும் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் 22 குடும்பங்களுக்கு கனூ என அழைக்கப்படும் துடுப்பினால் இயக்கப்படும் சிறியரக வள்ளங்களை அல்லது மிதவைகளை கையளிக்கும் நிகழ்வில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தம் அடிப்படை நிலைகளையே ஆட்டம் காணச் செய்தது. பல குடும்பங்கள் குடும்பத் தலைவர்களை இழந்து, பிள்ளைகளை இழந்து நிர்க்கதியான நிலையில் பெண்கள் தமது குடும்பத்திற்குத் தலைமை தாங்கி வாழ்வாதார தேடல்களை மேற்கொள்ள வேண்டியவர்களாக மாற்றியுள்ளது.
பெண்கள் பொதுவாகவே மென்மையானவர்கள். அவர்களின் உடல்வாகும் மென்மையான தொழில்களுக்கு ஏற்ற உடல் கட்டமைப்பையே கொண்டது.
இவ்வாறான பெண்கள் காலத்தின் கட்டாயத்தால் தமது பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தோட்ட வேலைகளுக்குச் செல்கிறார்கள், மண்வெட்டி வேலைகள் செய்கின்றார்கள். மீன்பிடிக்கக்கூடச் செல்கின்றார்கள்.
வெயிலில் வாடி, மழையில் நனைந்து, பனியில் கூதல் எடுத்து எல்லாத் தட்ப வெப்பங்களுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய தொழில்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் என அவர் குறிப்பிட்டார்.
