Ad Widget

யாழ். மாவட்டத்திலுள்ள வீடுகள் தொடர்பில் விவரங்கள் சேகரிப்பு

யாழ்.மாவட்டத்தில் வீடுகள் தொடர்பான விவரங்கள் மாவட்ட செயலகத்தால் பிரதேச செயலகங்கள் ஊடாக அவசர அவசரமாக கடந்த வார இறுதியில் திரட்டப்பட்டுள்ளன.

எது வித காரணங்களும் தெரிவிக்கப்படாமல் மேற்படி விவரங்கள் மாவட்டச் செயலகத்தால் திரட்டப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் சொந்த வீடுகளில் வசிப்பவர்கள், உரிமையாளர்கள் இல்லாத வீடுகள், வாடகை வீடுகள், வீடில்லாதவர்கள் போன்ற விவரங்களே யாழ்.மாவட்ட செயலகத்தால் கடந்த வார இறுதியில் அவசர அவசரமாக திரட்டப்பட்டுள்ளது.

குறித்த விவரங்களை உடனடியாக வழங்கு மாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் யாழ்.மாவட்டச் செயலகத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டு அதற்கமைய விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

மேற்படி விவரங்கள் என்ன நோக்கத்துக்காக திரட்டப்பட்டுள்ளன என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை, ஆட்சியுரிமை சட்டத்தின் படி ஓர் இடத்தில் ஒருவர் 10 வருடங்களுக்கு மேலாக தங்கியிருக்கும் பட்சத்தில், அந்த இடத்தின் உரித்து உரிமையாளர்களிடமிருந்து பறிபோய்விடும் என்ற விடயத்தில் திருத்தம் கொண்டு வரநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காணிகளை வீடுகளை இழந்தவர்கள் புதிய சட்டத்தின் மூலம் தமது வீடுகள் காணிகளை வழக்குத் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தச் சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ள நிலையிலேயே, யாழ். மாவட்டச் செயலகத்தால் இங்குள்ள வீடுகள் தொடர்பான விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

Related Posts