Ad Widget

யாழ். பல்கலை வளாகங்களில் நகரமயமாக்கல் திட்டமிடல் நடவடிக்கை – துணைவேந்தர்

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் வளாகங்களில் மேற்கொள்ளவுள்ள நகரமயமாக்கல் தொடர்பான திட்டமிடல் செயற்பாடுகளுக்காக 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

Vasanthe-Arasaraddnam-UNI

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுதாய, பிராந்திய திட்டமிடல் கற்கை நெறியின் இளம் திட்டமிடலாளர் சங்கத்தினரால் உலக நகரத்திட்டமிடல் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு துணைவேந்தர் தொடர்ந்து கருத்துக்கூறுகையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம், மருதனார்மடம் நுண்கலைப்பீடம், கைதடி சித்த மருத்துவ வளாகம், கிளிநொச்சி வளாகம், மற்றும் வவுனியா வளாகம் ஆகியவற்றில் இந்த நகரமயமாக்கல் திட்டமிடல் மேற்கொள்ளப்படவுள்ளது.

பல்கலைக்கழகம் உங்களுடையது என்ற எண்ணம் மாணவர்கள் அனைவரது மனதிலும் எழவேண்டும். எதிர்கால சந்ததிக்காக நீங்கள் விட்டு செல்லும் சொத்தாக பல்கலைக்கழகம் இருப்பதால், அதனை சிறந்த திட்டமிடல் மூலம் பேண வேண்டும்.

இவற்றை மேற்கொள்வதற்கு சிறந்த திட்டமிடல் உதவியாகவிருக்கும். அதற்கு பல்கலைக்கழகம் உதவிகளை வழங்கும்.

மாணவர்கள் கல்வி கற்பதோடு மட்டும் நின்றுவிடாமல், எதிர்காலத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். மாணவர்களின் எதிர்;காலம் அவர்களின் திட்டமிடலில்தான் உள்ளது.

ஒவ்வொரு சிறிய விடயத்திலும் திட்டமிட்டு செயற்பட வேண்டும். சிறந்த திட்டமிடல் செய்யும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தை அழகாக வைத்திருப்பார்கள். ஆனால் சில மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு சேறு பூசும் வேலையை செய்கிறார்கள். அழகாக வைத்திருக்க வேண்டிய பல்கலைக்கழக பூ மரங்கள் மேல் ஏறி நிற்கின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Posts