யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே. ரஜீபன் இன்றைய சந்திப்பில் 100 வீதம் நம்பிக்கை இல்லை. ஆனால் மாணவர்கள் முன்னிலையில் ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழிகளை கூறுவோம். மாணவர்கள் ஏற்றுக்கொண்டால் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவோம். இல்லாவிட்டால் தொடரும் போராட்டம் என்றார்.
01. மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான முழுமையான விளக்கமொன்றை
ஜனாதிபதி வழங்க வேண்டும்,
02. கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களில் குற்றவாளியை இனங்கண்டு விரைவில்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்,
03. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தாமதப்படுத்தக்கூடாது,
04. படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்காக அவர்களது பெற்றோருக்கு
ஏற்றுக்கொள்ளக்கூடிய நட்டஈட்டை அரசாங்கம் விரவைில் வழங்கிவைக்க வேண்டும்,
05. தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாணவர்கள் மட்டுமல்ல,
ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் இவ்வாறான சம்பவமொன்று இனியும் இடம்பெறக்கூடாது என்ற உறுதியை ஜனாதிபதி வழங்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.