Ad Widget

யாழ்.பல்கலை. பேரவைக்கு வெளிவாரி உறுப்பினர்கள் தெரிவு – ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்கு அண்மையில் இடம்பெற்ற வெளிவாரி உறுப்பினர்களின் தெரிவில் அடிப்படை நியமங்களையே பின்பற்றப்படவில்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்மொழியப்பட்ட சிலர் இடம்பெற்றுள்ளமையும் அவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அதுதொடர்பில் ஜனாதிபதி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைக்கவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக்கு வெளிவாரி உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட 14 பேரின் பட்டியலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த வாரம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அனுப்பிவைத்திருந்தது.

இந்த பெயர்ப்பட்டியல் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.

இந்த நிலையில் பேராசிரியர்கள் இருவரும் மருத்துவ வல்லுநர் ஒருவரும் கையொப்பமிட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அந்தக் கடிதத்தின் பிரதி ஜனாதிபதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக்கு வெளிவாரி உறுப்பினர்கள் தெரிவில் அடிப்படை நியமங்கள்கூட பின்பற்றப்படவில்லை. மருத்துவர், மதரீதியான பிரதிநிதி மற்றும் இராமநாதன் அறக்கட்டளையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்டவர்கள் தெரிவு செய்யப்படவில்லை.

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர்கூட இந்த தெரிவில் இடம்பெறவில்லை என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு தற்போதுள்ள பதவி வழி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைய மேலும் மூவரை வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பேரவை நியமனம் இறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts