யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு!

இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தமது செய்தி வெளியீடு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “பிரித்தானியர்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் அதன் பலாபலன்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

மாறாகத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட தொடர்ந்து வந்த நாடாளுமன்றங்களினால் பல்வேறு அடக்குமுறைகளே கட்டவிழ்த்து விடப்பட்டன.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்குற்ற செயற்பாடுகளுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.

காணாமலாக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் வீதிகளில் தொடர்ந்தும் இரவு பகலாகத் தீர்வு எதுவும் இன்றி போராடி வருகின்றார்கள்.

சட்டமுறைமைகளுக்கு மாறான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை.

யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும் தடைச்சட்டம் இதுவரையில் கைவாங்கப்படவில்லை.

பலவந்தமாக தமது காணிகள் பறிக்கப்பட்ட நிலையில் இராணுவ முகாம்களுக்கு முன்பாக நின்று பாதிக்கப்பட்ட எம் மக்கள் தொடர்ந்து இரவு பகலாகப் போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுதந்திர தினம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை தமிழ் மக்களின் குரலை சர்வதேசத்திடம் ஓங்கி ஒலிக்கச் செய்து நீதி கேட்கும் வகையில் தமிழர் தாயகத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளமை பொருத்தமானது.

இதற்கு எமது முழுமையான ஆதரவை நாம் வழங்குகின்றோம். எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்தப் போராட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

Related Posts