Ad Widget

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு – இன்று கூடுகிறது பேரவை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே 15ஆம் திகதி பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

அதற்கமையக் கிடைக்கப்பெற்ற 7 விண்ணப்பங்களில் இருந்து மூவர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கடந்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் காரணம் எதுவும் கூறாமல் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் துணைவேந்தருக்கான அதிகாரங்களுடன் கடந்த வருடம் மே மாதம் முதல் மூன்று மாத காலத்துக்கு வாழ்நாள் பேராசிரியர் க. கந்தசாமி தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர் துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த போதிலும் கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அந்தப் பணிகளைப் பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டது. அதற்கமைய தெரிவு பிற்போடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழகங்களின் பேரவைகளும் செயலிழந்ததன் காரணமாக இழுபறிப்பட்ட துணைவேந்தர் தெரிவு, கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய .ரத்துச் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் பேராசிரியர் க.கந்தசாமிக்குத் தகுதி வாய்ந்த அதிகாரியாக மூன்று மாதங்களுக்கொரு முறை நியமனம் நீடிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts