Ad Widget

யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விக்னேஸ்வரன் பதவியிலிருந்து இடைநிறுத்தம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 30ம் திகதியிடப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைவாக  ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  இந்த பதவி இடைநிறுத்தம் வழங்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி கடிதம் பதிவாளருக்கு நேற்று இரவு தொலைநகல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்துள் நடந்த தேடுதல் நடவடிக்கையில் பல்கலை மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் தலைவர் பிரபாகரன் படம் ஒன்று கைப்பற்றப்பட்டது. சிற்றுண்டிச்சாலையில் தியாகி திலீபனின் படம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் மாணவர் ஒன்றிய தலைவர் செய்லாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடாத்துனர் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் தெரிவானது அரசியல் தலையீடுகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  துணைவேந்தர் தேர்தலில்  ஜனாதிபதியின் தெரிவாக வேறு ஒருவர் இருந்த நிலையில் அப்போதைய  எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் அவர்களது பரிந்துரையின் அடிப்படையில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

பின்னர் எழுந்த சர்ச்சைகளின்போது  அவர் நிர்வாகத்திறன் அற்றவர் என குற்றம் சாட்டி அவரை நீக்குவதற்கான உயர்கல்வி அமைச்சினால் முயற்சி ஒன்று எடுக்கப்பட்டு பல்கலைக்கழக பேரவையின் அறிவுறுத்தலுக்கமைவாக அது தடைப்பட்டிருந்தது. அதன்பின் முள்ளிவாய்க்கால் நினைவுத்துாபி ஒன்று பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களால் அமைக்கப்பட்டது தொடர்பில் ஏற்பட்ட சர்சைகளில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அறிவுறுத்தலை மீறியதற்காக துணைவேந்தர் மீண்டும் இலக்கு வைக்கப்பட்டிருந்தார் .

அதன்பின்னர் 21ம் திகதி நாட்டில் நடைபெற்ற பயங்கரவாத செயல்களின் பின்னரான தேடுதல் நடவடிக்கையில் இராணுவம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட பின்னர் அரச எதிர்ப்பு விடயத்தில் துணைவேந்தரின்  மாணவர் சார்பான  நடவடிக்கைகள் அல்லது மாணவர்களின் அரசியல் நடவடிக்கைகள் மீதான மெத்தனப்போக்கு  உறுதிப்படுத்தப்பட்டநிலையில் ஜனாதிபதி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

தற்போது ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லாத நிலையில் தொடர்ந்து சம்பந்தரின் பரிந்துரைகள் எடுபடுமா என்பது கேள்விக்குரியதே என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது ஒருவகையில் கூட்மைப்பின் அரசியலுக்கு எதிரான ஜனாதிபதியின் ஒரு பழிவாங்கும்  நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகின்றது.

தற்போது துணைவேந்தர் கொழும்பு விரைந்திருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Related Posts