Ad Widget

யாழ்.பல்கலைக்கழகத்தில் மூவர் பணி இடை நீக்கம்!!

பரீட்சை கடமைகளில் இருந்து தவறிய குற்றச்சாட்டுக்காக விசாரணைகள் முடிவடையும் வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக துறைத்தலைவர், விரிவுரையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் பல்கலைக்கழக பேரவை பணி இடை நீக்கம் செய்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற பேரவை கூட்டத்தின் போதே மூவரையும் விசாரணைகள் முடிவடையும் வரை பணி இடை நீக்கம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கலைப்பீட மாணவர்களின் ஒரு துறைக்கான பரீட்சைக்கு வினாத்தாளை தயார் செய்யாத காரணத்தால், பரீட்சைக்கு தோற்ற தயாரான நிலையில் வந்த மாணவர்கள், பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலையில் திரும்பி சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பல்கலைக்கழக உயர் அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில், பேரவை அது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக மூவரையும் விசாரணைகள் முடிவடையும் வரையில் பணி இடை நீக்கம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்களுக்கான வினாத்தாளினை தயார் செய்யாது, துறைத் தலைவர் விரிவுரையாளரையும், விரிவுரையாளர் துறைத் தலைவரையும் மாறி மாறி குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் இறுதி வரை வினாத்தாள் தயார் செய்யப்படவில்லை. பரீட்சை வினாத்தாள் தயார் செய்யாது, பரீட்சை கடமையில் இருந்து தவறியதாக துறைத்தலைவர் மற்றும் விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான வினாத்தாள் தயார் செய்யபடாமை, பரீட்சை நடைபெறாமை ஆகியவை தொடர்பில் நிர்வாக அதிகாரி உரிய தரப்புகளுக்கு உரிய முறையில் அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Related Posts