Ad Widget

யாழ்.நாவாந்துறையில் போராட்டம்!! : தப்பியோடியவர் மீண்டும் யாழ் வைத்தியசாலையில்?

யாழ்.நாவாந்துறையில் இளம் பெண்ணை கடத்த முற்பட்டவர் என சந்தேகித்து தம்மால் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை காவற்துறையினர் கைது செய்யாதமையை கண்டித்து நாவாந்துறை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

நாவாந்துறை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவரை கடத்த முயற்சித்த நிலையில் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சந்தேக நபரை காவற்துறையினரிடம் மக்கள் ஒப்படைத்த நிலையில், காவற்துறையினரால் அந்நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தார். அதேவேளை குறித்த நபர் தப்பிசென்றமை தொடர்பில் காவற்துறையினர் தெரிவிக்கையில்,

நாவாந்துறை பகுதியில் பொதுமக்கள் ஒருவரை கட்டி வைத்து தாக்குவதாக தமக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து தாம் சம்பவ இடத்திற்கு சென்று தாக்குதலுக்கு இலக்கான நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் மீது எவ்விதமான முறைப்பாடுகளையும் எவரும் பதிவு செய்யாமையால் அந்நபரை தாம் கைது செய்யவில்லை. என காவற்துறையினர் தரப்பினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் , இன்றைய தினம் நாவாந்துறை மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். அதன்போது பெண்ணை கடத்த முற்பட்ட நபரை மடக்கி பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்த போது காவற்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காது அந்நபரை தப்பி செல்ல விட்டுள்ளனர். காவற்துறையினரின் இந்த செயற்பாட்டினை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை காவற்துறையினர் கைது செய்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தே போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை அன்றைய தினம் யாழ்.போதான வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய குறித்த நபர் , தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காவற்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த நபரை அங்கிருந்து மீட்ட காவற்துறையினர் மீண்டும் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அத்துடன் அவருக்கு காவற்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மீது காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பாட்டால், அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

Related Posts