யாழ் நகருக்கு அண்மையாக 300 பரப்பு காணி சுவீகரிப்பு: பொதுமக்கள் கொந்தளிப்பு!

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் காணி சுவீகரிப்புக்காக முன்னெடுக்கப்பட்ட அளவீட்டுப் பணிகள் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில், 300 பரப்புக் காணியை அரசுக்கு சுவீகரிப்பதற்காக, நில அளவீட்டுப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்படவிருந்தன.

இந்நிலையில், காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் மீறி சுவீகரித்தால், சாகும் வரையான உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்து தடுப்போம் என்றும் கூறி, எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுத்தனர்.

அதன் பின்னர், கிராம சேவகர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய, காணி சுவீகரிப்பை எதிர்த்தவர்கள் மனு ஒன்றிணை பிரதேச செயலாளருக்கு வழங்கியதைத் தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.

இந்தக் காணியை சுவீகரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால், காணி சுவீகரிப்பு அறிவித்தல் பத்திரம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அந்த அறிவித்தல் பத்திரத்தில், உரிமை கோரப்படாத காணியை சுவீரிக்கவுள்ளதால், காணி உரிமையாளர்கள் அந்த இடத்தில் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கமைய காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைக்கொண்டு பிரதேச செயலகத்தை நாடியிருந்தனர்.எனினும், காணி சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், யாரும் உரிமை கோர முடியாதென பிரதேச செயலாளர் அச்சுறுத்தும் தொனியில் காணி உரிமையாளர்களிடம் கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அரச அதிபரிடமும் காணி உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர்.

Related Posts