Ad Widget

யாழ்.தொல்லியல் சார்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டும்: மேயர்

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன சின்னங்களான மந்திரிமனை மற்றும் யமுனாஏரி ஆகியன பேணிப் பாதுகாக்க வேண்டும் என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தார்.

yokeswarey-mayar

யமுனாஏரி தனியார் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் விற்கப்பட்டுள்ளதாக அண்மையில் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நல்லைக்குமரன் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போது முதல்வர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் முதல்வரிடம் விளக்கம்கேட்ட வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடந்து கூறுகையில்,

மந்திரிமனையைச் சூழ மதில் கட்டுவதற்கு கடந்த வருடம் ஒருவர் முயற்சித்தார். இருந்தும் அதனை மாநகர சபை தலையிட்டு தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில், புராதன கால ராணிகளும், இளவரசிகளும் நீராடிய யமுனா ஏரியை தனியார் ஒருவர் தனக்குச் சொந்தமென சட்டத்திற்கு முரணான வகையில் பொய் உறுதி எடுத்து வைத்துள்ளார்.

இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளோம். நாங்கள் மாநகர சபை நிர்வாகத்தில் இல்லாவிட்டாலும் இனிவருங் காலங்களில் உள்ளவர்களும் தொல்லியல் சார்ந்த இடங்களைப் பாதுகாக்க பாடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேற்கூறிய இரண்டும் கலாசார மற்றும் மரபுரிமைகள் அமைச்சின் கீழுள்ள தொல்லியல் துறைக்குச் சொந்தமானவையென அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

இராஜ உறைவிடமாகிய மந்திரிமனையைக் குறித்த முக்கிய அறிவிப்பு

Related Posts