Ad Widget

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

jaffna-hindu-primareyயாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் பதவியில் கடமையாற்றும் என்.மகேந்திரராஜா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டமை தவறு என ஓர் எழுத்தாணை வழங்கும்படி கோரி, அதுவரை அப்பாடசாலையில் பதில் அதிபராகக் கடமையாற்றியவரும், மகேந்திரராஜா பதவியேற்றமையை அடுத்து தொடர்ந்து பிரதி அதிபர் பதவியில் இருப்பவருமான கே.தர்மஜீலன் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிரேம்சங்கர் இந்தத் தீர்ப்பை நேற்று புதன்கிழமை வழங்கினார்.

யாழ். இந்து ஆரம்பபப் பாடசாலையின் அதிபராகவிருந்த தியாகலிங்கம் கடந்த வருடம் ஓய்வுபெறுகின்றமையை அடுத்து அப்பதவிக்கு அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்றன.

எனினும் அதற்கிடையில் வடக்கில் மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் புதிய நியமனங்கள் வழங்கப்படாத நிலைமை நீடித்தது.

தியாகலிங்கம் ஓய்வுபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் பிரதி அதிபர் என்ற பதவிநிலையோடு தர்மஜீலன் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைக்கு மாற்றம் பெற்று வந்தார். இதனால் ஓய்வுபெற்ற தியாகலிங்கம் பாடசாலை அதிபர் பொறுப்பை தர்மஜீலனிடம் ஒப்படைக்க வேண்டியவரானார்.

தர்மஜீலன் பதில் அதிபராகக் கடமையாற்றினார். மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்தமையை அடுத்து நேர்முகத் தேர்வின் அடிப்படையில் என்.மகேந்திரராஜா புதிய அதிபராக நியமிக்கப்பட்டார்.

அந்த நேர்முகத் தேர்வுக்கு தர்மஜீலனும் தோற்றியிருந்தார். எனினும் நியமனம் மகேந்திரராஜாவுக்கு வழங்கப்பட்டமையை அடுத்து கடந்த ஒக்ரோபரில் அவர் பதவியைப் பொறுப்பேற்றார்.

அதுவரை பதில் அதிபர் பொறுப்பில் இருந்த தர்மஜீலன் மீண்டும் பிரதி அதிபராகக் கடமையாற்றவேண்டியவரானார். இந்த நிலையில் மேற்படி மகேந்திரராஜாவுக்கு வழங்கப்பட்ட அதிபர் நியமனத்தை ஆட்சேபித்து தர்மஜீலன் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக எழுத்தாணை வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் மகேந்திராஜா, வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்வி அமைச்சர், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், ஆளுநர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Related Posts