Ad Widget

யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு; இருவர் படுகாயம்

சித்தன்கேணி – அந்திராணி வாய்க்கால், சங்கரத்தை பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அந்திராணி வாய்க்கால் வீதியில் இளைஞர்கள் மூவர் துவிச்சக்கர வண்டியில் வேலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இலக்கத் தகடுகளை கறுப்பு துணியினால் மறைந்திருந்ததுடன், முகங்களையும் கறுப்புத் துணிகளால் மூடி தலைக் கவசம் அணிந்திருந்த நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர், குறித்த இளைஞர்கள் மீது கைக்கோடரி போன்ற ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடாத்தியிருந்தனர்.

இதன்போது இளைஞர்களில் இருவர் காயமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்ததனைத் தொடர்ந்து, மற்றைய இளைஞனை உதைந்து விழுத்திய வாள்வெட்டுக் குழுவினர் அவர் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை வீதியால் சென்ற வாள்வெட்டுக்குழுவினர், சங்கரத்தை பகுதியில் வீதியால் செல்பவர்களை நோக்கி வாளை விசுக்கியவாறு சென்றிருந்ததாகவும் எனினும் எவரும் வாள்வெட்டுக்கு இலக்காகவில்லை எனவும் அப் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

அந்திரானி வாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சித்தங்கேணி சந்தியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போது, குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாட்டை மேற்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தொலைபேசி மூலம் இச் சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்திய நிலையிலே வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி சிவில் உடையில் இருந்த என்.ஐ.பீ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டுக் கும்பலால் வெட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொக்குவில் குளப்பிட்டிச்சந்தியில் வைத்து கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற மறுநாளான 22ஆம் திகதி சுன்னாகம் பகுதியில் வைத்து குறித்த பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்திற்கான பொறுப்பை ஆவா கெங்ஸ்டர் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள குழுவொன்று ஏற்றுக்கொண்டது.

இதனையடுத்து வடபகுதியில் ஆவா குழுவின் உருவாக்கம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில் மீண்டும் நேற்யை தினம் இடம்பெற்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts