கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 18 பவுஸர்களில் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் நேற்று எடுத்துவரப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்கான தட்டுப்பாடு நீங்கியது.
கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் யாழ்.குடாநாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் வாகன சாரதிகள் பாதிக்கப்பட்டனர். ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை குறிப்பிட்டளவு பெற்றோல் எடுத்துவரப்பட்டு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
நேற்றைய தினம் ஒவ்வொன்றும் 6600 லீற்றர் கொள்ளவுடைய 18 பவுஸர்களில் பெற்றோல் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது. இது வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் தீவகம் உள்ளிட்ட 18 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து நேற்றைய தினம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெற்றோலுக்கான தட்டுப்பாடு நீங்கியது. இன்றைய தினமும் கொழும்பில் இருந்து பெற்றோல் எடுத்துவரப்படும் என்றும் மேற்படி அதிகாரி கூறினார்.