Ad Widget

யாழ்ப்பாணத்தின் பெருமைக்குரிய ‘வணிகக்கல்வி ஆசான்’ பசில் ஜெனதாஸின் இறுதி நிமிடங்கள்! (Video)

யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக கல்வி ஆசிரியரான பெனடிக்ற் பசில் ஜெனதாஸ் அவர்களின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் கதறல்களுக்கு நடுவே கடந்த (17.10.2016) திங்கட்கிழமை செம்மணியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

basil-sir-final

சுவாமியார் வீதி, கொழும்புத்துறையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிச் சடங்கு நிகழ்வுகளும், நினைவுரைகளும், சமயச் சடங்குகளும் இடம்பெற்றன.

இறுதி நிகழ்வில் ஏராளமான ஆசிரியர்கள், மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என என ஆயிரக்கணக்கில் திரண்டதால் ஆசிரியரின் வீட்டு வளவு நிரம்பி அயல் வீதிகளிலும் பெருமளவு மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.
இறுதி அஞ்சலி நிகழ்வில் கல்வியலாளர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

ஆசிரியர், மாணவர்களால் ஏராளமான மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டன.

ஆசிரியரின் வீடு மற்றும் அதனை அண்டிய சிறு ஒழுங்கைகளில் கூட மாணவர்களினால் ஏராளமான கண்ணீர் அஞ்சலிப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மாலை 3.45 மணியளவில் அன்னாரின் பூதவுடல் முன்னே செல்ல வீதியின் இரு பக்கங்களிலும் மாணவர்கள் வரிசையாக நடந்து வர, அவர்களுக்கு பின்னால் மக்களும் அணிவகுத்து வந்தனர்.

அன்னாரின் திடீர் பிரிவால் பெரும் சோகத்தில் இருந்த உறவுகள், மாணவர்களின் கதறல்களால் அப்பகுதியே அதிர்ந்தது.

அன்னாரின் வீட்டின் மட்டுமல்ல, செம்மணி மயானத்தில் இடம்பெற்ற நல்லடக்க நிகழ்விலும் பெருமளவு மாணவர்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

கடந்த 5 ஆம் திகதி அச்சுவேலி, வல்லை, நாவற்காடு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இவரும், மனைவியும் பாரவூர்தியினால் மோதுண்டு சுமார் 10 மீற்றருக்கும் அதிகமான தூரம் இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர். இவ்விபத்தில் படுகாயமடைந்திருந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பசில் ஆசிரியர் (வயது – 50) மரணமடைந்துள்ளார். அவரது மனைவி இன்னமும் கோமா நிலையிலேயே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மாணவர்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்த ஆசிரியரின் வாழ்க்கைப் பயணம் திடீரென முடிவுக்கு வந்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர வழியில்லாமல் இடைவழியில் தவித்த போது, அவர்களுக்கு இலவசமாகவே கல்வியைப் புகட்டியவர்.

குறிப்பாக முல்லைத்தீவு, ஓட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களுக்கும் நேரடியாக சென்று ஒரு சதம் காசு கூட வாங்காமல் கல்விப் பணியை மேற்கொண்டவர்.

கல்வி இன்று வியாபாரமாக்கப்பட்ட சூழ்நிலையில், பல ஆசிரியர்கள் ஏழை மாணவர்களிடமும் பெருந்தொகை பணம் வாங்கி கொஞ்சம் கூட மனிதாபிமானம் காட்டாது செயற்பட்டு வரும் நிலையில், பசில் ஆசிரியரின் மறைவு மாணவர் சமுதாயத்துக்கே பேரிடியாகும்.

இதனால் அவர் கடைசி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்திருக்கிறார். அவரிடம் ஒரு பழைய மோட்டார் சைக்கிள் மாத்திரமே இருந்துள்ளது. அவரிடம் காணி, சொத்துக்கள் என்று எதுவும் இல்லை என்றே கூறலாம். ஆனால், தனது சகோதரங்களை, உறவுகளை, மாணவர்களை நன்றாக வாழ வைத்துள்ளார்.

ஒருவனுக்கு கல்வி புகட்டுவது என்பது ஒரு மாபெரும் மகத்தான சேவை. அதன் மதிப்பை அறிந்து கல்விச் சேவையை அள்ளி வழங்கிய அந்த ஆசிரியருக்கு மாணவர் சமுதாயம் திரண்டு வழங்கிய அஞ்சலியை நேரில் பார்த்தவர்கள் உண்மையிலேயே பிரமித்துப் போயினர்.

அரசியல்வாதிகளின் கூட்டங்களுக்கு கூட இப்படி ஒரு பெரும் கூட்டத்தினை பணம் கொடுத்துக் கூட கூட்ட முடியாது.

பசில் ஆசிரியரின் கம்பீரத் தோற்றமும், மாணவர்களை அணுகும் விதமும், எளிமையும், இரக்க சிந்தனையுமே இன்றும் மாணவர்களின் நெஞ்சில் அவரை நிலை நிறுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆசிரியரின் நினைவுகளை தந்தையார் பகிர்ந்து கொண்ட போது,

எட்டுப் பிள்ளைகளுக்கு மூத்த மகன். அவர் குடும்பத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தவர். சொந்தங்கள், பந்தங்கள் யார் எங்கே கஷ்டப்படுகினம், என்ன நடந்தாலும் உடனே அங்கே நிற்பார். பண உதவி மாத்திரமல்ல சரீர உதவியினையும் முடிந்தவரை செய்வார். போர் நடந்த காலப்பகுதியில் எத்தனையோ பேருக்கு தனியொரு ஆளாக நின்று பதுங்குகுழி வெட்டிக் கொடுத்திருக்கிறார். மற்றைய மகன்களின் மனைவிமார் கூட அவரை பசில் அண்ணா என்று தான் கூப்பிடுவார்கள். பிள்ளைகளின் மதிப்பு தான் பெற்றோருக்கும். நான் பெரிதாக படித்தவனல்ல, ஆனால் நான் கச்சேரிக்கு போனால் என்ன, பிரதேச செயலகம் போனால் என்ன, வங்கிக்கு போனால் என்ன பசில் சேரின் அப்பா என்று அறிந்தால் அங்கே குறைந்தது என் மகனிடம் படித்த ஒரு மாணவராவது இருந்து எல்லா உதவிகளையும் கேட்டு கேட்டு செய்வார்கள். நான் எங்காவது அருகில் உள்ள இடங்களுக்கு கூட மோட்டார் சைக்கிளில் போனால் கூட கட்டாயம் ஹெல்மெட் போட வேணும் என வலியுறுத்துவார். அப்படி ஒரு முன்னெச்சரிக்கை உள்ளம் கொண்டவருக்கு எப்படி விபத்து சம்பவித்துள்ளதோ என நினைக்கும் போது ஏக்கமாக உள்ளது. என்றார்.

நெருங்கிய நண்பரும், சக ஆசிரியருமான ஷாம் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன்னியிலும், வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்களுக்கும் நேரடியாக சென்று இலவசமாக கல்வியைப் போதித்து வந்துள்ளார். நான் இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு முதன்மைக் காரணமே பசில் தான். எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அது நீண்டநாள் நீடிப்பதில்லை. சில நேரம் பிள்ளைகள் படிக்க வந்திருப்பார்கள். கஷ்டத்தில இடையில் நின்றிருப்பார்கள். அதனால் சேர் கவலைப்பட்டாலும், அவர்களுக்கு தனது நோட்ஸ்களை கொப்பியெடுத்து வீடு தேடிச் சென்று கொடுத்திருக்கிறார். தன்னலம் கருதாத ஒரு நண்பனை இழந்ததை ஏற்க முடியாதுள்ளது. என்றார்.

எல்லோராலும் விரும்பப்படத்தக்க ஒரு ஆளாக இருந்திருக்கிறார். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும், மாணவர்களின் வளர்ச்சிக்காக எப்படி ஒரு தவ வாழ்வு வாழ வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார் பசில் ஆசிரியர்.

இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். என்று பணக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடல் வரி வரும். அந்தப் பாடல் வரிக்கு நிரந்தர உதாரணமாக மாறிப் போய்விட்டார் பசில் சேர்….

பசில் சேரின் திடீர் இழப்பால் நிர்க்கதியாக உள்ள அவரின் குடும்பத்துக்கு உதவ பசில் சேரின் மாணவர்கள் மற்றும் ஷாம் ஆசிரியர் இணைந்து நிதியம் ஒன்றை ஆரம்பித்து உள்ளனர்.

அதற்கு பசில் ஆசிரியரிடம் படித்து இன்று பல்வேறு துறைகளிலும் பட்டொளி வீசிப் பிரகாசிக்கும் பழைய மாணவர்கள் அனைவரும் உதவலாம்.

Related Posts