Ad Widget

யாழில் 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே கொரோனா தொற்றியது- வைத்திய பணிப்பாளர் அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யாழில் வேறுவழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாகச் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களைச் சந்தித்து கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது அவர் தெரிவிக்கையில். யாழ்.மாவட்டத்தில் 20 பேருக்கு நேற்று பரிசோதிக்கப்பட்டது. இதன்போது எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் இன்றைய தினம் 30இற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் 200இற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் 17 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். நோயாளர்கள் அனைவரும் விசேட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்புவார்கள்.

யாழ். அரியாலைக்கு வந்த மதபோதகர் ஊடாகவே யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியிருக்கின்றது. வேறு வழிகள் ஊடாக மாவட்டத்திற்குள் தொற்றுப் பரவவில்லை. உலகளாவிய ரீதியில் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், இதன் எதிர்காலம் எப்படியிருக்கும் எனத் தொியவில்லை.

ஆனால் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார பிரிவினரும் தொடர்ச்சியாக நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, அறிவுறுத்தல்களுக்குக் கீழ்படிந்து அனைவரும் செயற்பட வேண்டும்” என்றார்.

Related Posts