தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சவால்களுக்கு மத்தியில் வலுசக்தி முகாமைத்துவத்தைப் பேணி, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பது குறித்தும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, எரிபொருள் பிரச்சினையை எதிர்கொள்ளும் நோக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.