Ad Widget

யாழில் 15 ஆயிரம் வீடுகளை உடனடி வேலைத் திட்டமாக நிர்மாணிக்க பிரதமர் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் முதற்கட்டமாக 15 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு உடனடி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கை பிரதிநிதித்தவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகளினால் வடக்கில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட்டன.

அத்துடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இதன்போது, தாமதமடைந்துள்ள வீடமைப்பு செயற்பாடுகள், காணி விடுவிப்பு பிரதான வீதிகளின் புனரமைப்பு தடங்கல்கள், முஸ்லிம் மக்களுக்கான மீள்குடியேற்றம், வைத்தியர்கள் வெற்றிடம், நெடுந்தீவுக்கான பல்வேறு தேவைகள் தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதில், வீட்டுத்திட்டம் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன். தொடர்ந்தும், தாமதமாகி வரும் நிர்மாணப் பணிகள் குறித்தும் அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

முதற்கட்டமாக, 15 ஆயிரம் வீடுகளுக்கான செயற்திட்டத்தை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதன்போது, பெரியளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில், உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அமைச்சர்கள் மற்றும் ஆளுநருக்கு பணிப்புரை விடுத்தார்.

Related Posts