Ad Widget

யாழில் கடந்த 10 மாதங்களுக்குள் 17 பேர் வீதி விபத்தால் உயிரிழப்பு

யாழ். மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்குள் 17 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக, யாழ். போக்குவரத்து பொலிஸார் செவ்வாய்கிழமை (18) தெரிவித்தனர்.

வீதிகளில் வாகன விபத்துக்களினால் ஏற்படும் இறப்புக்களையும் பாதிப்புக்களையும் தடுத்தல் தொடர்பான ஊடகவியலாளர் கலந்துரையாடல் யாழ். போதனா வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட போக்குவரத்து பொலிஸாரே மேற்கண்டவாறு கூறினர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றன. மது போதையில் வாகனம் செலுத்துவதால், ஏற்படும் விபத்தை விட அலைபேசி பாவனையால் ஏற்படும் விபத்துக்களே அதிகமாக காணப்படுகின்றன.

பாடசாலை ரீதியில் வீதி ஒழுங்குகள், விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் வீதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 37 பேர் படுகாயமடைந்ததுடன், 61 பேருக்கு சிறுகாயங்களும் ஏற்பட்டன. அத்துடன், 6 பாரிய சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.

மேலும், யாழ். மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களுக்குள் 8,228 வீதி போக்குவரத்து தொடர்பான சிறு குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பற்ற முறையில் போக்குவரத்து செய்தல் தொடர்பாக 206 குற்றங்களும், குடிபோதையில் வாகனம் செலுத்தியது தொடர்பாக 123 குற்றங்களும், போக்குவரத்து சட்டங்களை மீறியது தொடர்பாக 4,423, குற்றங்களும் வேறு சிறு விபத்துக்கள் தொடர்பாக 3,476 குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அன்றாடம் நடக்கும் வீதி விபத்துக்கள் தொடர்பாக பலர் முறைப்பாடுகள் செய்வதில்லை. அவ்வாறான விபத்து குற்றங்களை அறிக்கையிட்டால், கடந்த மாதங்களில் 20 ஆயிரத்துக்கு அதிகமான விபத்து குற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

1978ஆம் ஆண்டு இலங்கையில் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 993 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், 2013ஆம் ஆண்டு 49 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலும் வாகனங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன. வீதி சட்ட ஒழுங்குகளை கடைப்பிடித்து நடந்தால் விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts