Ad Widget

மேலும் மூன்று இலங்கையர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரு நாட்டு கடற்படை பாதுகாப்பையும் மீறி மேலும் மூன்று இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கை தமிழர்கள் சென்றடைய ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் இந்திய அரசைப் பொறுத்த அளவு இலங்கையில் இருந்து வரக்கூடிய நபர்களை இந்தியாவில் அகதிகளாக பதிவு செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததையடுத்து, தமிழகம் சென்றுள்ள 80 இலங்கைத் தமிழர்களும் இலங்கை அகதிகளாக பதிவு செய்யாமல் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொழும்பைச் சேர்ந்த ஜெசிந்தா மேரி மற்றும் அவரது பத்து வயது மகன் மற்றும் மன்னார் மாவட்டம் சிலாவத்துறையைச் சேர்ந்த அணிஸ்டன் உள்ளிட்ட 3 பேர் ஒரு பைப்பர் படகில் மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து நேற்றிரவு புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி அடுத்துள்ள கோதண்டராமர் கடற்கரை பகுதியை சென்றடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மரைன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் இவர்கள் மூவரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை 83 இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக சென்று மண்டபம் முகாமில் தங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts