பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் ஆசனங்கள் மாற்றப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் தமது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விடுத்த கோரிக்கையையடுத்து அவரது ஆசனம் இடமாற்றப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த இராமநாதன் அர்ச்சுனா எம்.பியும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி எதிர்க்கட்சியின் நான்காவது தொகுதியில் முதல் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த கஜேந்திரகுமார் எம்.பி.யின் ஆசனம் அந்த வரிசையில் முதலாவது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை காலம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அடுத்ததாக யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் ஆசனம் அமைந்திருந்தது.
ஆனால் அர்ச்சுனா இராமநாதனுக்கு அருகில் உள்ள தனது ஆசனத்தை அரசியல் கட்சி மற்றும் சிரேஷ்டத்துவம் அடிப்படையில் வேறு இடத்திற்கு மாற்றுமாறு கஜேந்திரகுமார் எம்.பி சபாநாயகருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அவ்வாறே, அர்ச்சுனா எம்.பியும் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.
பாராளுமன்றத்தில் தனக்கு இடதுபுறத்தில் அமர்ந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், பொதுவெளியிலும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும், சமூக ஊடகங்களிலும் தன்னைத் தொடர்ச்சியாக அவதூறாகப் பேசுவது, மிரட்டல் விடுப்பது, இழிவான சொற்களைப் பயன்படுத்துவது போன்ற விடயங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து குறித்த கோரிக்கையை அவர் விடுத்திருந்தார்.
சுயேச்சைக் குழுவிலிருந்து முதன்முறையாக தெரிவான எம்.பிக்கு, சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்குப் பின்னரே ஆசனங்கள் ஒதுக்கப்படுவதே வழக்கம் என தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நடைமுறைக்கு மாற்றமாக அவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, எதிர்க்கட்சிப் பக்கத்தில் நான்காவது தொகுதியில் முதல் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்த அவரை முதலாவது இடத்திற்கும், கஜேந்திரகுமார் எம்.பிக்கு அடுத்ததாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஆசனமும் அடுத்ததாக தொழில் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் ஆசனமும் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அதற்கு அடுத்ததாக இருந்த அர்ச்சுனா இராமநாதனின் ஆசனம் அதே இடத்தில் பேணப்பட்டுள்ளது.