Ad Widget

முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு கை கொடுக்கின்றது பனை அபிவிருத்தி சபை!

வலிகாமம் கொத்தணிக்கு கீழ் தென்னை பனை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்ற முன்பள்ளிகளின் ஆசிரியர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ பனை அபிவிருத்தி சபை முன்வந்து உள்ளது.

பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினத்தின் வழிகாட்டலில் கூட்டுறவு முறையிலான பாற்பண்ணைத் திட்டம், கூட்டுறவு முறையிலான பனைக் கைத்தொழில் திட்டம் ஆகியவற்றின் ஊடாக இவர்களின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சங்கானை, மானிப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பளை, பண்டத்தரிப்பு, கோண்டாவில், காரைநகர் ஆகிய 07 தென்னை பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களாலும் நடத்தப்படுகின்ற முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் நேற்று காலை வலிகாமம் கொத்தணி காரியாலயத்துக்கு வரவழைக்கப்பட்டு இத்திட்டங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டார்கள்.

இச்சந்திப்பு கொத்தணி முகாமையாளர் சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு தலைவர் பசுபதி சீவரத்தினம் பேசியவை வருமாறு:-

“முன்பள்ளி ஆசிரியர்களான உங்களின் அர்ப்பணிப்பு, பற்றுறுதி நிறைந்த சேவைகளை நான் நன்கு அறிவேன். இன்றைய சிறுவர்கள்தான் நாளைய எமது சமூகம். எனவே நாளைய சமூகத்தை உருவாக்குகின்ற சிற்பிகள் நீங்கள்தான்.

அப்பேர்ப்பட்ட பாரிய கடமையை செய்கின்ற உங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற தலையாய பொறுப்பு மக்களையும், சமூகத்தையும் நேசிப்பவர்களுக்கு நிச்சயம் உள்ளது. இந்நிலையில் குறைந்த ஊதியத்தில் மாபெரும் கடமையை செய்கின்ற உங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எமது பனை அபிவிருத்தி சபை முன்வந்து உள்ளது. உங்கள் கூட்டு முயற்சியை கொண்டு நீங்கள் ஒரு பாற்பண்ணையை கூட்டுறவு முறையில் உருவாக்க முடியும். அதே போல பனைக் கைத்தொழிலை கூட்டுறவு அடிப்படையில் மேற்கொள்ள முடியும்.

பனைக் கைத்தொழில் மூலம் எமது சபை மட்டக்களப்பில் 8000 குடும்பங்களை சொந்த கால்களில் இன்று நிற்க வைத்து உள்ளது. எமது சபையின் இன்றைய பொருளாதார சாதனைகளுக்கு அடிப்படையாக இருப்பது மக்கள் நலன் சார்ந்த அரசியல் வழிமுறையே ஆகும். இந்நிலையில் எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற எமது பொருளாதார திட்டங்களுக்கு அனைவரினதும் அர்ப்பணிப்புடனான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். ”

பனை அபிவிருத்தி சபையின் மேற்சொன்ன திட்டங்கள் மூலம் 110 ஆசிரியர்கள் வரை பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது தலா 4000 ரூபாய் வரையிலேயே இவர்கள் ஊதியம் பெறுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts