Ad Widget

முன்னாள் போராளிகளுக்கு உத்தரவாதம் வேண்டும்: விஜயகாந்

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டுடன் இணைந்திருந்தவர்களை அரசாங்கம், புனர்வாழ்வளித்து விடுதலை செய்து வருகிறது. இந்நிலையில், விடுதலையான சிலர் கடத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்க விடயம். ஆகையினால், அவர்களின் வாழ்வுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என முன்னாள் மாநகரசபை உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எஸ்.விஜயகாந் தெரிவித்துள்ளார்.

s-vijayakanth

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அச்செய்தியின் முழு விபரம் வருமாறு,

30 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த ஆயுதப் போராட்டம், 18 மே 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளும் தமிழீழ காவல்துறை உறுப்பினர்களும், புலிகள் என்று சந்தேகிக்கப்படும் அனைவரும் இலங்கை அரசாங்கத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு முகாம்களில் பலமாதகாலமாக புனர்வாழ்வு அழிக்கப்பட்டதன் பின்னர், இலங்கை அரசாங்கம் அவர்களை கட்டங்கட்டமாக விடுதலை செய்து வந்தது. இந் நிலையில் அண்மையில் மன்னாரில் சுட்டுக் கொல்லப்பட்ட கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனுக்கு அடுத்ததாக 17.11.2014ஆம் ஆண்டு கடைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச்சென்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி அந்தோனிமுத்து அன்டன்ஜெயரோன் காணாமற் போயுள்ளதாக அவரது மனைவி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நாம் அறிகின்றோம்.

புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழ்பேசும் இளைஞர், யுவதிகளுக்கும் பின்னால் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர் அவர்களுடைய அன்றாட வாழ்வை தினம் தினம் கண்காணித்து வருவதுடன், அவர்களுடைய முழு விவரங்களையும் திரட்டி வைத்திருப்பதும், அழைத்து விசாரணை செய்வதும் என்ற நிலைமையே இன்றுவரை நிகழ்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமே.

இந்த வகையில் ஆயிரக்கணக்கானவர்கள் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு இன்று அவர்கள் தம் குடும்பத்தினருடனும், சொந்த பந்தங்களுடனும் வாழ்ந்து வரும் நேரத்தில் மேற்கூறப்பட்ட இரு சம்பவங்களானது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் மத்தியிலும் அவர்களின் சகோதர, சகோதரர்கள், உற்றார், உறவினர்கள் மத்தியிலும் கடுமையான பய உணர்வையும் மனப்பீதியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

எனவே, முன்னாள் போராளிகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், மேற்படி காணாமற்போன அந்தோனிமுத்து அன்டன்ஜெயரோன் அவர்களுடைய நிலைமை தொடர்பாக இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும், பொலிஸாரும் விரைந்து நடவடிக்கை எடுத்து, காணாமற் போன முன்னாள் போராளியை மீட்டு அவருடைய குடும்பத்தாருடன் இணைப்பதற்குரிய உடன் தேடுதல் நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லை என்றால் புனர்வாழ்வு அழிக்கப்பட்ட தமிழ்பேசும் இளைஞர், யுவதிகள் இந்த நாட்டில் வாழ அச்சப்பட்டு அவர்கள் வேறு வகையான முடிவுகளை எடுப்பதற்கும் இப்படியான சம்பவங்கள் வழிசமைக்கக்கூடும்.

எனவே, உடனடியாக முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் அவர்களுடைய குடும்பத்துடனும் சமுதாயத்துடனும் இணைந்து வாழக் கூடிய வழிவகைகளை சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் முன்னாள் போராளிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ் பேசுகின்ற ஒவ்வொரு தமிழர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதையே நாம் இச் சந்தர்ப்பதில் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

Related Posts